• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இனங்களுக்கு இடையில் முறுகலை ஏற்படுத்த முயற்சி - அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ

இலங்கை

இனங்களுக்கு இடையில் முறுகலை ஏற்படுத்த நாடாளுமன்றுக்குள்ளும் பலர் முயற்சித்து வருவதாக சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நல்லிணக்கம் இல்லாத காரணத்தினால்தான் நாடு பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளது.
இதனால், ஜனாதிபதி சர்வக்கட்சி மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து, பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சி எடுத்து வருகிறார்.

ஆனால், இதற்கு சிலர் முழுமையாக ஒத்துழைப்பு வழங்குவதில்லை. நாட்டில் 75 வருடங்களாக நீடிக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வினைக் காணாமல், அதிகாரத்தை கைப்பற்றவே இவர்கள் முயல்கிறார்கள்.

நாடு பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்தபோதுகூட, நாடாளுமன்றில் ஒன்றாக செயற்பட முடியாத நிலைமை தான் காணப்படுகிறது.

இரண்டு இனங்களுக்கு இடையில் முறுகலை ஏற்படுத்த நாடாளுமன்றுக்குள்ளும் பலர் இன்று முயற்சித்து வருகிறார்கள்.

13 இன் ஊடாக அதிகாரங்களை வழங்கினால், பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கூறுகிறார்கள்.
ஆனால், காணி அதிகாரம் ஜனாதிபதியிடம் மட்டும்தான் உள்ளது.

இதில் ஒரு பகுதி காணி அமைச்சுக்கும் இன்னொரு பகுதி காணி ஆணையாளர் நாயகத்துக்கும் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கு அப்பால் நிர்வாக நடவடிக்கைகள் அனைத்தும், பிரதேச செயலகத்திற்கு தான் உள்ளது.

எனவே, நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்பட வேண்டும்.

75 வருடங்களாக தோல்வியடைந்துவிட்டோம். அடுத்த 25 வருடங்களிலேனும் ஒன்றாக பயணித்து வெற்றி காண்போம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply