பிரான்ஸில் போராட்டம் - தோல்வியை ஒப்புக்கொண்ட மக்ரோன்
போராட்டங்களைக் கையாள்வதில் முன்னெச்சரிக்கை மற்றும் உளவுத்துறை நடவடிக்கைகளில் குறைபாடுகள் ஏற்பட்டதை இன்று(19) பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், ஒப்புக்கொண்டுள்ளார்.
பிரான்ஸில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, எரிபொருள் விலை உயர்வு, கல்வித்துறையில் நிலவும் குறைபாடுகள் மற்றும் பொதுச் சேவைகள் மீதான அதிருப்தி காரணமாக வெடித்த போராட்டங்களைத் தொடர்ந்து, அந்நாட்டில் அரசியல் மற்றும் பாதுகாப்பு நெருக்கடி தீவிரமடைந்துள்ளது.
கடந்த 17ஆம் திகதி இடம்பெற்ற நாடு தழுவிய போராட்டங்களில் 5.5 இலட்சம் பேர் பங்கேற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போராட்டங்களின்போது கடைகள் சூறையாடப்பட்டதுடன், பொதுக் கட்டடங்கள் மற்றும் வாகனங்களுக்கும் சேதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்துநேற்று (18) பாரிஸ் உள்ளிட்ட நகரங்களில் மோதல்கள் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், இன்று(19) பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், போராட்டங்களைக் கையாள்வதில் முன்னெச்சரிக்கை மற்றும் உளவுத்துறை நடவடிக்கைகளில் குறைபாடுகள் ஏற்பட்டதை ஒப்புக்கொண்டுள்ளார்.
உள்துறை அமைச்சர் லோரான் நுனேஸ் பதவி விலக முன்வந்தபோதும், அதனை மக்ரோன் நிராகரித்து, நிலைமையைக் கட்டுப்படுத்தவும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
சனிக்கிழமை போராட்டங்களைத் தொடர்ந்து சுமார் 2,400 பேர் கைது செய்யப்பட்டதாகவும், பாதுகாப்புப் பணியாளர்கள் பலர் காயமடைந்ததாகவும் சமீபத்திய சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.






















