• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கியூபெக் சிறைச்சாலைக்குள் டிரோன் மூலம் உணவு விநியோகம்

கியூபெக் மாகாணத்தில் உள்ள ஒரு அதிஉயர் பாதுகாப்புச் சிறைச்சாலைக்கு, டிரோன் மூலம் மெக்டொனால்டு உணவுகள் மற்றும் மதுபானம் ஆகியவை கைதி ஒருவரின் செல் ஜன்னல் வழியே விநியோகிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெக்டொனால்டு நக்கெட்ஸ், பிரெஞ்ச் ஃபிரைஸ், டிப்பிங் சாஸ் மற்றும் மதுபானம் ஆகியவை ஒரு கைதியின் அறைச் சன்னலுக்கு டிரோன் மூலமாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

கியூபெக் மாகாணத்தில் உள்ள செயின்ட்-ஆன்-டெஸ்-பிளெயின்ஸ் பகுதியில் அமைந்துள்ள சிறப்பு கையாளுதல் பிரிவு மத்திய சிறைச்சாலை. இது கியூபெக்கிலிருந்து வடக்கே சுமார் 55 கி.மீ தொலைவில் உள்ளது.

கடந்த வியாழக்கிழமை அதிகாலை வேளையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. கியூபெக் சிறைகளில் மிகவும் ஆபத்தான குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ள இந்தப் பகுதி, கனடாவின் மிகவும் பாதுகாப்பான மற்றும் கடுமையான கண்காணிப்பு உடையதாகக் கூறப்படும் இடமாகும்.

ஆனால், இங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை மீறி டிரோன் மூலம் தடைசெய்யப்பட்ட பொருள்கள் கொண்டு செல்லப்படுவது கவலை அளிப்பதாகச் சிறைத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து கனடா திருத்தச் சேவை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. சிறைகளுக்குள் இதுபோன்று தடைசெய்யப்பட்ட பொருள்கள் நுழைவதைத் தடுக்கப் பல்துறை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அதன் பேச்சாளர் கெவின் அன்டோனுச்சி தெரிவித்துள்ளார்.

மேலும், இச்செயலில் ஈடுபடும் கைதிகளுக்கு ஒழுங்கு நடவடிக்கை அல்லது குற்றவியல் வழக்குகள் தொடரப்படலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பெடரல் கன்சர்வேடிவ் கட்சியின் பொதுப் பாதுகாப்பு விமர்சகர் ஃபிராங்க் கபுடோ, இந்தச் சம்பவம் "மிகவும் அதிர்ச்சியளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

சிறைகளுக்குள் போதைப்பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் செல்போன்கள் போன்றவற்றை டிரோன்கள் மூலம் கொண்டு செல்வது மிகப்பெரிய பிரச்சனையாக மாறியுள்ளதாகவும், சிறைத்துறை அதிகாரிகள் இதற்குக் உடனடி தீர்வு காண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

Leave a Reply