• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாடு முழுவதும் மின் தடை - நுரைச்சோலை மின் உற்பத்தி அலகுகள் முடக்கம்

இலங்கை

நாடு முழுவதும் இன்று (17) காலை ஏற்பட்ட மின்தடையைத் தொடர்ந்து, நுரைச்சோலை லக்விஜய அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி அலகுகளும் தற்காலிகமாகச் செயலிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மின் கட்டமைப்பு இயக்குநரகத்தின் (NSO) தகவலின்படி, மின்சாரக் கடத்தல் வலையமைப்பில் (Transmission Network) ஏற்பட்ட உறுதியற்ற தன்மையே நாடு தழுவிய மின்தடைக்குக் காரணமாகும்.

இதற்கிடையில், மின்சாரக் கட்டமைப்பை மீளச் சீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் படிப்படியாக மின்சார விநியோகம் வழமைக்குத் திரும்பும் என்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சில பகுதிகளில் மின்சார விநியோகம் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், நாடு தழுவிய மின்தடைக்கான துல்லியமான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனத் தெரிவித்த அமைச்சர், இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

குறிப்பாக, நேற்று (16) கொத்மலை மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட செயல்பாட்டுக் கோளாறு, மின் கட்டமைப்பில் சமநிலையின்மையை ஏற்படுத்தியதா என்பது குறித்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், மின் கட்டமைப்பை விரைவாகச் சீரமைக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கும் வகையில், வீடுகளின் கூரைகளில் சூரியசக்தி மின்தகடுகளைப் (Rooftop Solar Panels) பொருத்தியுள்ள நுகர்வோர், அவற்றைத் தற்காலிகமாக மின் கட்டமைப்பிலிருந்து துண்டித்து வைக்குமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
 

Leave a Reply