• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புலம்பெயர்தல் அமைப்பு குறித்து தெரியாமல் விழித்த கனேடிய அமைச்சர்

கனடா

Immigration minister appears unaware of court ruling: நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில், கனடாவின் புலம்பெயர்தல் அமைச்சர், புலம்பெயர்தல் அமைப்பு குறித்து தெரியாமல் விழித்த விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

கனடாவின் ஃபெடரல் புலம்பெயர்தல் துறை அமைச்சரான Lena Metlege Diab, கனடா வானொலியில் பங்கேற்ற நேர்காணல் நிகழ்ச்சி ஒன்று சமீபத்தில் ஒலிபரப்பாகியுள்ளது. 

அப்போது கேள்வி ஒன்றிற்கு அவர் அளித்த பதில் ஒன்று அகதிகள் நல ஆர்வலர்களுக்கு அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

புலம்பெயர்தல் துறை அமைச்சரான Diabஇடம், சிங் தீர்ப்பு (Singh decision) என்னும் ஒரு விடயம் தொடர்பில் ஒரு கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

அதற்கு அவர், கனடாவில் நிறைய சிங்குகள் இருக்கிறார்கள், பல தீர்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளன என்று பதிலளித்துள்ளார்.

விடயம் என்னவென்றால், கனடாவின் புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் வாரியம் உருவாக்கப்படுவதற்கே, இந்த சிங் தீர்ப்புதான் காரணம்!

அதாவது, கனடாவின் உச்ச நீதிமன்றத்தின் 1985 ஆம் ஆண்டு, Singh v. Minister of Employment and Immigration என்னும் வழக்கில், ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கப்பட்டது.

சத்னாம் சிங் என்னும் இந்தியர், கனடாவில் புகலிடம் கோரியபோது புலம்பெயர்தல் மேல்முறையீட்டு வாரியத்தின் முன் நேரில் ஆஜராகி வாய்மொழி விசாரணைக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். 

அப்போது, உச்சநீதிமன்றம், கனேடிய உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் சாசனத்தின் 7ஆவது பிரிவின்கீழ், நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்படும்போது முழுமையான வாய்மொழி விசாரணைக்கான உரிமை, வெளிநாட்டு புகலிடக் கோரிக்கையாளர்கள் உட்பட, கனடாவில் இருக்கும் அனைவருக்கும் பொருந்தும் என்றும், நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்படும்போது முழுமையான வாய்மொழி விசாரணைக்கான உரிமையை அவர்களுக்கு இது உறுதி செய்கிறது என்றும் தீர்ப்பளித்தது.

அந்த தீர்ப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட பெரும் நிர்வாகத் தேவை போன்ற விடயங்கள்தான், கனேடிய அரசாங்கத்தை மசோதா C-55ஐ நிறைவேற்றத் தூண்டியது.

இதன் மூலம், கனடாவின் புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் வாரியம் (IRB) 1989ஆம் ஆண்டு, ஜனவரி 1ஆம் திகதியன்று முறையாக நிறுவப்பட்டது.

இந்த தீர்ப்பின் அடிப்படையில், இன்றும் பல சட்ட ரீதியான சவால்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.

ஆனால், கனடாவின் புலம்பெயர்தல் துறை அமைச்சருக்கு இந்த தீர்ப்பு குறித்து தெரியவில்லை.

தனது துறை சார்ந்த முக்கிய விடயம் குறித்தே சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு தெரியவில்லை என்னும் இந்த விடயம் அகதிகள் நல ஆர்வலர்களுக்கு அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில், கனடா பிரதமர் மார்க் கார்னியிடம், இப்படி தனது துறை சார்ந்த விடயங்களே தெரியாத ஒருவர் புலம்பெயர்தல் துறை அமைச்சராக நீடிப்பாரா என கேள்வி எழுப்பப்பட, கார்னி, ஆம், நிச்சயம் நீடிப்பார் என பதிலளித்துள்ளார்! 
 

Leave a Reply