இந்தோனேஷிய நிலநடுக்கத்தால் இலங்கைக்கு ஆபத்து இல்லை
இலங்கை
இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு அதிகாரம் பெற்ற உள்ளூர் மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் கலந்தாலோசித்து வெளியிடப்பட்ட அறிவிப்பாகும் என்றும் மையம் குறிப்பிட்டுள்ளது.
கிழக்கு இந்தோனேசியக் கடற்பகுதியில் இன்று (15) அதிகாலையில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமும் டஜன் கணக்கான தொடர் அதிர்வுகள் ஏற்பட்டது.
இந்த அனர்த்தத்தில் குறைந்தது இருவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தென்கிழக்கு ஆசிய நாடான அந்த நாட்டின் பல பகுதிகளில் 1 மீட்டருக்கும் (3 அடி) குறைவான உயரமுள்ள சுனாமி அலைகள் பதிவாகின.
நிலநடுக்கம் ஏற்பட்ட சுமார் மூன்று மணி நேரத்திற்குப் பிறகு விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.






















