• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நயாகரா நீர்வீழ்ச்சியில் விழுந்து உயிர் பிழைத்த நபர்

கனடா

கனடா மற்றும் அமெரிக்க எல்லைக்கு நடுவே அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான நயாகரா நீர்வீழ்ச்சியின் ஹார்ஸ்ஷூ நீர்வீழ்ச்சியில் விழுந்த நபர் ஒருவர் நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த ஜூன் 28 ஆம் திகதி இந்த விபரீத சம்பவம் நிகழ்ந்துள்ளது. நபர் ஒருவர் நயாகராவின் மேல் ஆற்றுப் பகுதியில் நீந்திக் கொண்டிருந்த நிலையில், ஆற்றில் நிலவிய அதிவேக நீரோட்டம் காரணமாக, அந்த நபர் கட்டுப்படுத்த முடியாமல் இழுத்துச் செல்லப்பட்டு, நீர்வீழ்ச்சியின் விளிம்பிலிருந்து கீழ்நோக்கி விழுந்துள்ளார்.

அவர் சுமார் 52 மீற்றர் (சுமார் 170 அடி) உயரத்திலிருந்து நீர்வீழ்ச்சியின் அடியில் இருக்கும் பாறைகள் நிறைந்த பகுதிக்குள் விழுந்துள்ளார்.

உடனடியாக விரைந்து வந்த அவசர மீட்புக் குழுவினர், அவரை ஆற்றுப் பகுதியிலிருந்து மீட்டு பலத்த காயங்களுடன் உள்ளூர் மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்துள்ளனர்.

நயாகரா நீர்வீழ்ச்சியின் கடுமையான நீரோட்டம் மற்றும் அடியில் இருக்கும் இராட்சதப் பாறைகளின் தாக்கம் காரணமாக, இத்தகைய உயர்மட்ட ஆபத்தான பகுதியில் விழுந்து ஒருவர் உயிர் பிழைப்பது என்பது மிகவும் அரிதான விஷயம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு வேலி மற்றும் தடைசெய்யப்பட்ட எல்லைகளைத் தாண்டி சுற்றுலாப் பயணிகள் ஆபத்தான பகுதிகளுக்குள் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், தங்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு எச்சரிக்கை வழிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றுமாறும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
 

Leave a Reply