இங்கிலாந்தில் 2 ரெயில்கள் மோதல்- ஒருவர் பலி, பலர் படுகாயம்
லண்டனிலிருந்து சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெட்போர்டு பகுதியில் செயின்ட் பான்கிராஸ் நிலையத்தை நோக்கி தெற்கு திசையில் பயணித்துக் கொண்டிருந்த ரெயில் மற்றொரு ரெயிலோடு மோதிக்கொண்டன.
இரு ரெயில்களும் நேற்று மாலை சுமார் 5:15 மணியளவில் பெட்போர்டு நகருக்கு வெளியே மோதிக்கொண்டதாக ரெயில்வே கூறியுள்ளது.
இந்த விபத்தில் முன்னோக்கித் தூக்கி எறியப்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பல பயணிகளுக்கு எலும்பு முறிவுகள் ஏற்பட்டன.
இந்நிலையில் அவசரகால சேவைக்காக கிழக்கு இங்கிலாந்து ஆம்புலன்ஸ் சேவையைச் சேர்ந்த வான்வழி ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு விரைந்தன. படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பெட்போர்டு காவல்துறை மற்றும் உள்ளூர் தீயணைப்பு, மீட்பு மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகளைச் சேர்ந்த அதிகாரிகள் சம்பவ இடத்தில் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மோதல் நிகழ்ந்ததாக ரெயில் ஓட்டுநர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கார்பியிலிருந்து செயின்ட் பான்கிராஸ் செல்லும் மாலை 4:40 மணி ரெயில், நாட்டிங்ஹாமிலிருந்து அதே நிலையத்திற்குச் செல்லும் மாலை 3:50 மணி ரெயிலுடன் மோதியதாக ஈஸ்ட் மிட்லாண்ட்ஸ் ரெயில்வே ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நேற்று முழுவதும் இந்த வழித்தடத்தில் செல்லும் அனைத்து ரெயில்களும் ரத்து செய்யப்பட்டன. மேலும் இன்றய பயணங்கள் தொடர்பான அட்டவணையை உறுதிப்படுத்த இயலவில்லை என்றும் ரெயில்வே கூறியுள்ளது.






















