14 வயது மாணவி 17 வயது இளைஞருடன் வீட்டைவிட்டு ஓட்டம் - பொலிஸில் ஒப்படைத்த தாய்
இலங்கை
14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரைத் தற்காலிகமாகத் தம்முடன் அழைத்துச் சென்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், 17 வயதுடைய கடை ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நமுனுகுல பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பண்டாரவளை, பத்தியகெதர பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர், நமுனுகுல கனவெரல்ல தோட்டத்தின் வசிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவியையே இவ்வாறு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
காதல் உறவில் விரிசல்
மீட்கப்பட்ட மாணவி, மருத்துவப் பரிசோதனைக்காகப் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் மாணவியுடன் காதல் உறவில் இருந்ததாகவும், பின்னர் அந்த உறவில் விரிசல் ஏற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மாணவியின் தந்தை தம்மைக் கண்டிப்பதாகவும் துஷ்பிரயோகம் செய்வதாகவும் மாணவி கூறியதையடுத்து, இருவரும் அவ்விடத்தை விட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.
மாணவியின் தந்தை பொலிஸில் முறைப்பாடு செய்வதற்கு முன்னதாகவே, சந்தேகநபர் கொழும்பில் வேலை நிமித்தம் தங்கியிருந்த தனது தாயைச் சந்திக்கச் சென்றிருந்தார்.
பின்னர், மாணவியும் சந்தேகநபரும் அவரது தாயும் தாங்களாகவே முன்வந்து பொலிஸில் சரணடைந்தனர். பதுளை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தலைமையிலான குழுவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






















