என் உயிர்த் தோழன்!
சினிமா
கிராமத்து மண்வாசனையை ’அக்மார்க்’ தரத்துடன் திரையில் கொண்டுவந்த இயக்குநர் பாரதிராஜா, நகரத்துக் கதைகளிலும் தாம் சோடை போனவர் அல்லர் என்பதை நிரூபிக்கும் வகையில் சிகப்பு ரோஜாக்கள், டிக் டிக் டிக் போன்ற படங்களையும் எடுத்து வெற்றிக்கொடி நாட்டினார். அவரது படைப்புக்களில் அரசியலை முதன்மையாக வைத்து உருவாக்கப்பட்ட படம் ’என் உயிர்த் தோழன்.’
இந்தத் திரைப்படத்தில் பாபு, இரமா, இரமேஷ் ஆகிய மூவரையும் புதிதாக அறிமுகப்படுத்தினார் பாரதிராஜா. தம் கதாநாயகியருக்கு ரகரத்தில் பெயர்சூட்டுவது பாரதிராஜாவின் வழக்கமல்லவா? அவ்வாறே இப்படத்தின் நாயகிக்கு இரமா என்று பெயர்சூட்டியிருந்தார். 🙂
”உடல் மண்ணுக்கு...உயிர் என் தலைவருக்கு” என்று அரசியல் தலைவரை – அவரது உண்மை முகம் தெரியாமல் - கண்மூடித்தனமாக நம்பிப் பின்தொடரும், குயிலுக்குப்பத்தைச் சேர்ந்த அப்பாவி அரசியல்தொண்டனைப் பற்றிய திரைப்படம் இது. அந்தக் கதாபாத்திரத்துக்குக் கனகச்சிதமாகப் பொருந்தியிருந்தார் அறிமுக நாயகன் பாபு.
வில்லனாகத் ’தென்னவன்’ எனும் கதாபாத்திரத்தில் அறிமுகமான நடிகர் இரமேஷுக்குத் தென்னவன் என்ற பெயரே திரைத்துறையில் நிலைத்துப்போனது. [அவருக்கு இந்தப் படத்தில் பாரதிராஜாவே பின்னணிக் குரல் கொடுத்திருந்தார்.] சென்னைச் செந்தமிழ் பேசிய வடிவுக்கரசியின் நடிப்பும் படத்தில் பிரமாதமாக இருந்தது.
மக்களைக் காக்க வந்த ’அவதார புருஷர்’களாகப் பொதுவெளியில் தம்மைக் காட்டிக்கொள்ளும் அரசியல் தலைவர்கள், மக்களின் அறியாமையையும் நம்பிக்கையையும் எப்படியெல்லாம் சுரண்டிக் கொள்(ல்)கிறார்கள் என்பதைத் துணிச்சலாக வெளிப்படுத்திய இந்தப் படம் ஏனோ எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை!
நாயகன் பாபு இந்தப் படத்திற்குப் பிறகு (விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த) பெரும்புள்ளி, தாயம்மா, பொண்ணுக்குச் சேதி வந்தாச்சு உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பிறகு தாம் நடித்துவந்த படம் ஒன்றில் ’டூப்’ போடாமல் மேலிருந்து கீழே குதித்தபோது முதுகுத்தண்டில் பலத்த அடிபட்டு, முப்பது ஆண்டுகள் படுத்த படுக்கையாக இருந்து 2023இல் காலமானார்.
திரைத்துறையில் சுடர்விட்டுப் பிரகாசிக்க நடிப்புத்திறமை இருந்தால் மட்டும் போதாது! அதிர்ஷ்டம் அதைப்போல் ஆயிரம் மடங்கு இருக்கவேண்டும். 😇திறமையிருந்தும் அதிர்ஷ்டம் கைகொடுக்காததால் ஒளிராமலே உதிர்ந்த நட்சத்திரம் பாபு! 😢ஊழிற் பெருவலி யாவுள?
பாரதிராஜா அறிமுகப்படுத்திய ரகர வரிசை நாயகியரில் சோபிக்காமல் போனதும் இந்தப் படத்தின் நாயகி இரமா மட்டுமே! 😞[மீண்டும் come back கொடுத்து இப்போது அம்மா வேடங்களில் நடித்துவருகிறார்.]
படம் வெற்றிபெறாமல் போனாலும் படத்தின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பின. 'ஏ…ராசாத்தி ரோசாப்பூ வா வா வா’ பாடலையும், ’குயிலுக்குப்பம் குயிலுக்குப்பம் கோபுரமானதென்ன’ பாடலையும் இப்போது கேட்டாலும் நமக்குப் புதிய உற்சாகம் பிறக்கும்! 😍
பாடல்களைக் கங்கை அமரன் எழுத, இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். சில ஆண்டுக்காலப் பிரிவுக்குப் பிறகு இரு இராஜாக்களும் (பாரதிராஜா, இளையராஜா) கைகோத்த படமிது!
என் உயிர்த் தோழனை இனிய தமிழ் மக்கள் இன்னும் கொஞ்சம் அரவணைத்திருக்கலாம்! 🙂
~மேகலா இராமமூர்த்தி























