• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ஒரு மகத்தான மனிதர்

சினிமா

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ஒரு மகத்தான மனிதர். என் மீது எப்போதுமே அவருக்குத் தனி பிரியம் உண்டு. கால்ஷீட் பிரச்னை காரணமாக, எம்.ஜி.ஆர் படங்களில் ஷூட்டிங்குகளுக்கு நான் கால தாமதமாகச் சென்றது உண்டு. அது போன்ற சமயங்களில், என் இக்கட்டைப் புரிந்துகொண்டு, டைரக்டரிடம், 'மற்ற காட்சிகளை எடுத்துக்கொண்டு இருங்கள். நாகேஷ் வந்தவுடன், அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்துக் கொள்ளலாம்' என்று சொல்லிவிடுவார். ஆகவே, நான் தாமதமாகப் போனாலும் எம்.ஜி.ஆர் படங்களைப் பொருத்தவரையில் ஷூட்டிங் தடைபடாது.

எம்.ஜி.ஆரின் சிறப்பு அவரது ஈகை குணம் தான். நடிகர் பாலாஜியின் நாடகக் குழுவில் நான் நடித்துக் கொண்டிருந்தபோது ஒருநாள் சேலத்தில் நாடகம் நடைபெற இருந்தது. காரிலேயே சேலம் சென்றோம். உளுந்தூர்பேட்டை தாண்டி ஒரு கிராமத்தின் வழியே போய் கொண்டிருந்தபோது எனக்குத் தாகம் ஏற்பட்டது. ரோடு ஓரத்தில் இருந்த ஒரு குடிசையின் அருகில் காரை நிறுத்தினோம். நான் காரை விட்டு இறங்கியதும் ஒரு வயதான பெண்மணி, என்னிடம், 'என்ன வேணும்?' என்று விசாரித்தார். 'குடிக்கத் தண்ணீர் வேணும்!' என்றதும் குடிசைக்குள் சென்று, பெரிய செம்பில் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தார். வெயில் நேரத்தில் ஜில்லென்று உள்ளே இறங்கிய அந்த தண்ணீர் ரொம்ப இதமாக இருந்தது

நன்றி சொல்லிவிட்டுப் புறப்படுவதற்கு முன், நடிகர் பாலாஜி, தமது பர்ஸிலிருந்து நூறு ருபாய் நோட்டை எடுத்தார். அதை அந்தப் பெண்மணியின் கையில் கொடுத்தார். அதை வாங்கிக்கொண்ட அவர், ஆச்சர்யத்துடன் ருபாய் நோட்டையே சில வினாடிகள் பார்த்துக்கொண்டு இருந்தார். சட்டென்று ருபாய் நோட்டைப் பிடித்தபடி, தமது இரு கைகளையும் தலைக்கு மேலே தூக்கி, பாலாஜியைப் பார்த்து, 'எங்கள் எம்.ஜி.ஆர் வாழ்க!' என்றார். சில நிமிடங்களுக்கு ஒன்றுமே புரியாமல் குழம்பிப் போனோம். அப்பறம் விஷயத்தை நாங்களாகவே புரிந்துகொண்டோம்.

அந்த கிராமத்து மூதாட்டியைப் பொறுத்தவரை, 'எம்.ஜி.ஆர்' என்கிற மனிதர் மட்டும்தான் முன்பின் தெரியாத ஏழை, எளிய மக்களுக்கும் உதவி செய்வார். ஏழை மக்களுக்கு ஒருவர் உதவுகிறார் என்றால் அது நிச்சயமாக எம்.ஜி.ஆரை தவிர வேறு ஒருவராக இருக்கவே முடியாது என்பது, அவரது மனத்தில் பதிந்து விட்டது. இவரைப் போன்ற நம்பிக்கைகொண்டு ஏழை எளியவர்கள், இன்னுமும் நிறையப் பேர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.

- நாகேஷ் 
 

Leave a Reply