கிராமத்து பல்துறை கலைத்துவ ஆளுமையாளர் கவிஞர்.க.மயில்வாகனம்
இலங்கை
கிராமத்து பல்துறை கலைத்துவ ஆளுமையாளர் கவிஞர்.க.மயில்வாகனம்
அவர்கள்பற்றிய பார்வை (36வது சிரார்த்த தினத்தை முன்னிட்டு -10/06/2026)
மட்டக்களப்புத் தமிழகத்தில் சீர் பெற்ற செட்டிபாளையம் பதி புலமையின் விளைநிலம் என்பது மறுக்க முடியாத உண்மை. இப் பதியில் இரணிய சம்கார அம்மானை எழுதிய மாறன் விதானை சமகாலப் புலமை நண்பர்களான புலவர் இ.வ. கணபதிப்பிள்ளை, வரகவி சின்னவப் புலவர் மற்றும் வாய்மொழிப் புலமை பெற்ற கணபதியார் (துறைக்காரர்), அவரது மகன் கவிஞ்ஞர் மயில்வாகனம் ஆகியோர் வாழ்ந்தார்களென்பது எமக்கெல்லாம் பெருமை.
வார்த்தைகளுக்கு வகிடெடுத்து கவிகளாய் அழகு பார்த்தவர் செட்டியூர் சிந்தனைச் செல்வன் என்ற புனை பெயர் கொண்ட கவிஞ்ஞர் க. மயில்வாகனம், அவர் கவிதையோடு மட்டுமன்றி நாடகம், நாட்டுக் கூத்து, நாட்டிய நாடகம், வசந்தன், கும்மி, கோலாட்டம் போன்ற ஒட்டு மொத்தக் கலைகளின் தலைவன். கலைத்தாயின் ஏக புதல்வன். கவிஞ்ஞனாக, பாடகனாக, இசையமைப்பாளராக, இயக்குனராக, நடிகராக எத்தனை பாத்திரங்கள். 1970 களில் இருந்து செட்டிபாளையம் என்னும் பெயருக்கு கலைகளால் இலங்கையின் மூலை முடுக்கெல்லாம் முத்திரை பதித்தவர் செட்டியூர் சிந்தனைச் செல்வன் என்ற கவிஞர் க.மயில்வாகனம் என்பது நிதர்சனமான உண்மை
இவர் கணபதிப்பிள்ளை மாரிமுத்து தம்பதிகளின் ஏக புதல்வனாக 1938.09.05 ம் திகதி பிறந்தார் தனது ஆரம்பக் கல்வியினை தனது கிராமத்திலுள்ள மட்/பட்/ செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் கற்றார். 21 வயதில் ஆசிரியத் தொழிலை விரும்பி ஏற்றுக் கொண்டார். மட்/ ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியர் பயிற்சியை முடித்தார். தனது 27 வது வயதில் செட்டிபாளையத்தை சேர்ந்த சம்புநாதன் சாந்த பூரணம் என்பவரை திருமணம் செய்து அதன் பேறாக நான்கு பிள்ளைகளைப் பெற்றார். சீரும் சிறப்புடனும் பேரும் புகழுடனும் வாழ்ந்த கவிஞ்ஞர் அவர்கள் இவ்வுலகை விட்டுப் பிரியும் வரை 11 ற்கு மேற்பட்ட பாடசாலைகளில் ஆசிரியராகக் கடமையாற்றினார். மட்/தாழங்குடா ஸ்ரீ விநாயகர் வித்தியாலயத்தில் அதிபராகக் கடமையைாற்றிக் கொண்டிருந்தபோது 1990.06.10ம் திகதி இவ்வுலகை விட்டு இயற்கை எய்தினார்.
கவிஞ்ஞர் மயில்வாகனம் ஐயா அவர்கள் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தையார் கணபதியார் எந்த விடயமானாலும் பாடல்களாகவே
கூறுவாராம். செட்டிபாளையம் துறையிலிருந்து மறுகரையான அம்பிளாந்துறைக்கு தோணியில் பயணிகளை ஏற்றிச் செல்லும் போதும் மீண்டும் பயணிகளை ஏற்றி வரும் போதும் பாடல்களைச் சரளமாகப் பாடிக் கொண்டே தோணியை செலுத்திச் செல்வாராம். இவரது பாடல்களைக் கேட்பதற்காகவே இவருடன் பலர் பயணம் செய்வார்களாம். வாய்மொழிக் கவிஞராக தந்தையார் இருந்ததினால் கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும் என்பதற்கு ஓப்ப மயில்வாகனம் அவர்கள் கருவிலே திருவானவர். கவிஞ்ஞராக பிறந்து பிறந்து வளர்ந்தவர். மேலும் ஈழத்து இரட்டைப் புலவர்களான இ.வ. கணபதிப்பிள்ளை, வரகவி சின்னவப் புலவர் ஆகியோரின் பாசறையில் வளர்ந்ததனாலும் சிறுவயதில் இருந்து இயல்பாகவே இவர் கவிதை எழுதுவதில் அதீத ஈடுபாடு கொண்டிருந்தார் என்பதனை இவரது படைப்புக்களைக் கொண்டு அறிய முடிகிறது.
கலைப்பணி
மயில்வாகனம் ஐயா கல்வி கற்ற காலங்களில் தனது கவிதைகளில் சமூக சீர்திருத்தக் கருத்துக்கள், மூடநம்பிக்கைகள், சோசலிசக் கருத்துக்கள், சாதிமத இன வேறுபாடற்ற தன்மை, கல்வியின் சிறப்பு, காதல், பாரம்பரிய வெற்றிலைத் தொழில் என்பனவற்றை எடுத்துக் கூறும் பாடல்களை யாத்திருந்தார். கவிஞ்ஞர் அவர்கள் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்சி பெற்ற காலப்பகுதியில் கலாசாலையினால் வெளியிடப்பட்ட நூல்கள், சஞ்சிகைகளில் இவரது கவிதைகள் இடம்பிடித்துள்ளதை காண முடிகின்றது பல
கவிஞ்ஞர் மயில்வாகனம் அவர்கள் தனது கவிதைத் தொகுதிகளை செட்டியூர் சிந்தனை செல்வன் என்ற புனை பெயரிலேயே வெளியிட்டுள்ளார். சிறு வயதில் இருந்து நேரடியாகக் கண்ட பிரச்சனைகள் பல இவரது கவிதையில் கவிவடிவாக வந்துள்ளன. இவர் தமிழ் இலக்கியம், கிராமியக் கலை, கல்வி, சமூகம் போன்ற பல் துறைகளில் ஆற்றிய பணிகள் விலை மதிக்க முடியாதவை.
இவரது கவிதைகள் நவீன, மரபு முறையில் அமைந்துள்ளதோடு கற்றோர் முதல் பாமர மக்கள் வரை அனைவரும் விளங்கிக் கொள்ளக் கூடிய வகையில் அமைந்துள்ளதையும் காண முடிகின்றது. பாரம்பரிய கிராமியக் கலைகளுக்கு நவீன வடிவம் கொடுத்து உயிரப்பித்தவர் செட்டியூர்ச் சிந்தனைச் செல்வன்.
உதாரணமாக நாடு செழித்திட என்னும் கவிதையில் ஒரு சில வரிகள் அதற்கு எடுத்துக்காட்டு.
நாட்டுப்பற் றென்னுமொரு நிலத்தினிலே நல்லெண்ண மென்னுமொரு விதை விதைத்து ஊட்டியே பொருள் வளத்தை உரமதாக்கி உழைப் பென்னும் நன்னீரால் பயிர் வளர்த்து நீட்டிவளர் சனத்தொகையாம் களைகள் தன்னை நீக்கியே இன பேதப் பூச்சி யெல்லாம் மேட்டில் நல் நீதியெனும் மருந்தடித்து நட்பென்னும் அறுவடையில் நாடு செழித்திட
தனது கவிதைகளினூடாக சமூதாயத்தில் அன்றாடம் காணப்படும் பிரச்சனைகளை எடுத்துக் கவி வடித்து சமுதாய மட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தியள்ளார். அக்காலத்தில் சீதனப்பிரச்சனை ஒரு சமூகப் பிரச்சனையாக உருவெடுத்திருந்தது. மற்றும் பெண்கள் அரை குறை ஆடைகளை உடுத்துவது சமுதாய கலாசார சீர்கேடுகளுக்கு ஏதுவாக இருக்கின்றதனையும் தனது புதிதோர் உலகம் காண்போம் என்ற கவிதையில் மிகவும் அழகாகக் கூறியுள்ளார்.
புதிதோர் உலகம் காண்போம் என்னும் பாடலில் சில வரிகள்
மணமாகா மங்கையர் மலிந்தராம், காரணம் மாப்பிள்ளை தட்டுப்பாடோ?
சீதன முட்டுப்பாடோ?
பாதி உடைகள் போடார்
தினமெங்கள் சிந்தையைத் திணற அடித்திடும் மணமென்றால் கைப்பணம் வாங்கிடும் பழக்கத்தை மறுசீரமைப்புச் செய்தால் பணமில்லா ஏழைகள் பதிதோர் ஒளி காண்பார்
இக் கருத்துச் சிந்தனை தற்காலத்திற்கும் பொருத்தமுடையதாய் இருப்பதை நாம்
காணலாம்.
சுகாதார வாரத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களின் போட்டி நிகழ்ச்சி
ஒன்றிற்காக எழுதப்பட்டு பரிசும் பாராட்டும் பெற்ற நாட்டிய நாடகத்தில் சில வரிகள்.
பட்டணந்தான் போகலாமடி பெண்ணே
பணம் காசு தேடலாமடி
கட்டாணி முத்தே என் கண்ணாட்டி நீதான் வாடி பொண்டாட்டிக்காரி
சுகாதார வாரமடி பெண்ணே சுத்தத்தைப் பேணாயடி.
கவிஞ்ஞரது பாடல்களில் காதல் பாடல்கள் ஏராளம். உதாரணத்திற்கு ஒன்றை இங்கே
குறிப்பிடலாம்.
வெட்டுக்காட்டு மூலைக்குள்ள
விறகு வெட்டடப் போகையில் எட்டி நின்று கல்லெறிஞ்சி என்னை எதிரில் நின்று மறித்ததென்ன.
கணவன் மனைவிக்கிடையே ஏற்படும் சுவாரஸ்யமான சம்பவங்களையும் பாடல்களாக
வடிப்பதில் வல்லவர் கவிஞ்ஞர் மயில்வாகனம் அவர்கள். காலையில் பாரம்பரிய தொழிலான வெற்றிலைத் தோட்டத்திற்குச் செல்லாமல் ஏதோ சிந்தனையில் இருந்த
பாடலாக வடித்துள்ளார்.
கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் இடம்பெற்ற உரையாடலை இவ்வாறு
வெத்திலைத் தோட்டத்திற்கு நீங்க விடிந்தெழும்பிப் போங்கவென்று எத்தனை தரம் சொல்லிவிட்டேன்
நீங்க என்ன பண்ணிப் படைக்கிறீங்க
சின்னப் பிள்ளை நீ சீறாதடி வெறும் தேத்தண்ணி ஒன்று கொண்டுவாடி
என்னைப் பற்றித் தெரியாதோடி
சும்மா இருந்தாப்ப கை எறிஞ்சிடுவன்
எந்த நேரம் பார்த்தாலும் நீங்க ஏதோ ஒன்றைக் கையில் வைத்து சிந்தனையாய் இருப்பதென்ன
இப்ப தெரியாமத்தான் கேக்கிறன் நான்
வேலைக்குப் போகவில்லை என்று வீண்கதைகள் பேசாதடி
காலை நேரம் நல்லதென்று நான் கந்த புராணம் படிக்கிறேன்டி
கந்தபுராணம் படித்துமென்ன
நீங்க காசி காண்டம் படித்துமென்ன நம்ம சொந்தப் புராணம் தெரியலேயே நான் சொல்லி வைத்தும் புரியலேயே
இவரது கவிதைகளில் ஏன் இந்த நிலை என்ற கவிதையின் இடமாற்றத்திற்காகக் கஷ்ரப்படும் அரச உத்தியோகஸ்தர்களின் நிலையினையும் ஊடாக புதியதோர் ஒளியை நோக்கி என்ற கவிதையின் ஊடாக கதிர்காம யாத்திரையின் பயனையும் யாத்திரை செல்கையில் இளவயதினர் கேலி சேட்டைகள் செய்வதனையும் கூறுகின்றார். மற்றும் சோசலிசம் பற்றி கதைக்கும் இல்லையென்றும் கூறியுள்ளார் நாட்டில் சோசலிசம்
திருக்குறளின் பெருமையினையும் அதனது சிறப்பினையும் தனது நினைவுச் சின்னம் எனும் கவிதையில் மிகவும் அழகாகக் கூறியுள்ளார். அவரது நிலவும் பெண் என்ற கவிதை 1970களில் தினபதி பத்திரிகையில் கவிதா மண்டலம் எனும் ஆக்கத்தின் ஊடாக வெளிவந்தது. இதனால் கவிஞ்ருக்கு பாராட்டுக்களும் கிடைத்தன. இக்கவிதை ஊடாக நிலவின் அழகினையும் மறைமுகமாக காதலின் வேதனையினையும் வெளிக்காட்டியுள்ளார். நாடு செழித்திட எனும் கவிதையின் ஊடாக இலங்கைத் திருநாட்டின் வளங்கள் பற்றி அழகுற இலகு மொழி நடையில் பாடியுள்ளார்.
புதுயுகம் படைப்போம் என்ற கவிதையின் ஊடாக சாதி,மத, இன பேதமின்றி சகலரும் சமத்துவத்துடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளார். முதலாளித்துவ வர்க்கத்தினரால் மலையக மக்கள் எதிர் நோக்கும் இன்னல்கள் பற்றியும் எல்லா வளமும் உள்ள நமது நாட்டில் நாமே உழைத்து முன்னேற வேண்டும் எனவும் அரச உத்தியோகஸ்தர்களது கவலையீனங்கள், தவறுகள் போன்ற விடயங்களையும் கவிதையாக வடித்துள்ளார்.
நீதிநங்கை மூலமாக இயற்கை எழில் கொஞ்சும் நதியினை அழகாக கவி வடித்துள்ளார் இவற்றை விட புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளையின் உயர் பணிகள், உழவுத் தொழிலின் பெருமை, தாயின் அன்பு. கொல்லுமையா நீங்காத நினைவுகள், விடிவை நோக்கி, மாநிலம் பயனுற வாழ்வதற்கே, கற்பின் கலை, மூண்டாக்கால். மனந்திருந்தாய் போன்ற கவிதைகளை வெளியிட்டுள்ளார். இவருடைய இன்னும் பல கவிதை ஆக்கங்கள் 1990 களில் ஏற்பட்ட பயங்கரவாத அசாதரண சூழல் காரணமாக அழிந்து போனது வேதனையான விடயம்.
இவற்றுக்கப்பால் கவிதைத் துறையை விடுத்து கும்மி, வசந்தன், கரகாட்டம்.
வாழிப்பாடல், நவீன நாட்டுக்கூத்து நாட்டிய நாடகம் போன்ற துறைகளில் அதிகபாண்டியத்தினை இவர் பெற்றிருந்தார், கிராமத்தில் மட்டுமன்றி அயல் கிராம
ஆலயங்களில் நடைபெறும் திருவிழாக்களில் இவரது படைப்புக்கள் பல அரங்கேறும். செட்டிபாளையம் அம்மன்கோவில் கலைநிகழ்வில் இவரது தியாகம் போன்ற இன்னும் பல நாடகங்கள் இவருக்குப் பாராட்டுக்களைப் பெற்றுக் கொடுத்தது. இவரது நவீன நாட்டுக் கூத்தில் தலைவிதி மற்றும் சோலியன் குடும்பி சும்மாடு ஆகாது போன்றவை காலத்தால் அழியாத கலை வடிவங்கள். மரபு ரீதியான நாட்டுக் கூத்தை நவீன வடிவில் புரட்டிப் போட்டு புதுமைகள் பல செய்த புரட்சிக் கவிஞ்ஞன் செட்டியூர் சிந்தனைச் செல்வன் என்றால் மிகையாகாது.
தமிழ் கலை கலாசார விடயங்களை வளர்க்கும் நோக்குடன் தமிழ் சுடர் நளின கலாமன்றத்தினை ஆரம்பித்த பெருமை இவரையே சாரும். இக் கலா மன்றத்தின் ஊடாக இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் இவரது வீட்டில் வைத்து இளைஞர்களைக் கொண்டு ஒலிபரப்புக்கள் மேற்கொண்டு கிழமையும் கிராம மஞ்சரி எனும் நிகழ்ச்சியின் ஊடாக அவை பல் ஒவ்வொரு ஊடாக பல்வேறு பட்ட கலை நிகழ்வுகளை நடாத்தி வந்தது. இந்நிகழ்வு கவிஞ்ஞர் மயில்வாகனம் அவர்களுக்கு கலை உலகில் மேலும் புகழைத் தேடித் தந்தது. இதன் மூலம் கவிஞ்ஞர் அவர்கள் பல சமூதாய சீர் திருத்தக் கருத்துக்களை வெளிக் கொண்டு வந்துள்ளார். இவரது சேவையையும், கவி ஆர்வத்தையும் ம.தெ.எ.பற்று உதவி அரசாங்க அதிபர் அலுவலகம் பாராட்டிப் பொன்னாடை போர்த்திக் கௌரவித்ததுடன் அச் செயலகத்தினால் வெளியிடப்படும் சிறப்பு மலரில் சில வருடங்கள் தொடர்ச்சியாக இவரது ஆக்கங்கள் இடம் பிடித்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.
பாடசாலை ஆசிரியராக கவிஞ்ஞர் மயில்வாகனம் அவர்கள் இருந்த காலங்களில் கலாசார தமிழ்த் தினப்போட்டிகளில் இவரால் பயிற்றுவிக்கப்பட்ட நாடகங்கள், இமுதலிடம் பெற்றுள்ளது. இவரது காலத்தில் இலங்கைத்தீவில் தமிழர்கள் வாழ்ந்த இடங்களில் எல்லாம் அவரை அறியாதோர் இல்லை என்றே கூறலாம். ஆனால் காலவோட்டத்தில் அவரை வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இன்றைய சந்ததியினர் அறிந்து கொள்ளும்
சமூகப் பணி
கவிஞ்ஞர் மயில்வாகனம் அவர்கள் கவிஞராக மட்டுமல்லாது அக்காலத்தில் சிறந்த சமூக சேவகராகவும் செயற்பட்டார்கள். கிராமோதய சபைத் தலைவராக பல தடவை கிராம மக்களால் தெரிவு செய்யப்பட்டு பணியாற்றிய கவிஞ்ஞர் அவர்கள் அன்றாட வாழ்வில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை உரிய அதிகாரிகளுக்கு தனது எழுத்தாற்றல் மற்றும் பேச்சாற்றல் மூலம் எடுத்துக்கூறி அதற்கான தீர்வுகளையும் பெற்றுக் கொடுக்கக் காரண கர்த்தாவாக இருந்துள்ளதனை இவ்வூர் மக்கள் இன்றும் மறவாது நினைவு கூருகின்றனர்.
செட்டிபாளையம் கிராமத்தில் உள்ள கடற்கரையோரத்தை அண்டி வாழும் மக்கள் குடி நீரைப் பெற நீண்டதூரம் நடந்து செல்லவேண்டிய நிலை காணப்பட்டது. இந்தப் பிரச்சனையைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பலதடவை பேசி கிராமத்தில் பல்வேறு இடங்களில் பொதுக்கிணறுகள் அமைக்கப்படுவதற்கு காரணமாக இருந்தார். இதன் மூலம் குடும்பங்கள் இன்று வரை நீரைப் பெற்று வருகின்றமை பல் குறிப்பிடத்தக்கது.
இவ்வூரில் வாழும் சலவைத்தொழிலாளிகள் பலர் குடியிருக்க சொந்த நிலம் இன்றி இருக்க இடவசதியின்றி மிகவும் வேதனையின் மத்தியில் வாழ்ந்து வந்தனர்.மயில்வாகனம் ஐயா கிராமோதய சபைத்தலைவராக இருந்த காலத்தில் அப்பிரச்சனைகளைக் கடிதம் மூலம் விளக்கி அப்போதைய ஜனாதிபதி கௌரவ ஆர்.பிரேமதாசா அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்ததன் பயனாக ஓரிரு மாதங்களுக்குள்ளேயே அவர்கள் ஒவ்வொருவருக்கும் அரசு நிலம் இதனை இன்றும் அம் மக்கள் நன்றியுடன் நினைவு கூறுகின்றனர். நிலம் வழங்கியது
இக்கிராமத்தில் கந்தையா சன சமூக நிலையத்தை ஆரம்பித்து அங்கு பிரதேச சபையின் உதவியுடன் பத்திரிகை வாசிப்பதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டார் இதன் மூலம் கிராம இளைஞர் யுவதிகளிடையே வாசிப்புப் பழக்கத்தினை ஊக்கப்படுத்தினார்.
செட்டிபாளையம் கிராமத்தைப் பொறுத்த வரையில் நீண்ட நாட்களாக பஸ் தரிப்பிடம் இல்லாது மக்கள் பெரிதும் கஸ்ரப்பட்டனர் இக்குறையினை சம்பந்தப்பட்டவர்களுடன் கதைத்து குறுகிய காலப்பகுதிக்குள் பஸ்தரிப்பிடம் ஒன்றை அமைக்க காரண கர்த்தாவாக இருந்தார். இது போன்று மீனவர்கள் ஓய்வு பெறுவதற்கான (அம்பலம்) ஓய்வு பெறும் மண்டபத்தினை அமைப்பதற்கு ஊன்று கோலாக இருந்தவர் க. மயில்வாகனம் ஐயா அவர்கள்.
இவர் செட்டிபாளையம் கிராம அபிவிருத்தி சங்கம், கந்தையா சனசமூக நிலையம். கிராமோதய சபை, சுடர் ஒளி, செட்டிபாளையம் நளின கலாமன்றம் போன்றவற்றின் தலைவராகவும் ம.தெ.எ.பற்று ப.நோ.கூ.சங்க பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் நீண்டகாலம் சேவை செய்தார். மேற்படி சங்கங்களின் தலைவராக இருந்த காலங்களில் கிராமத்தில் சிரமதானம் மூலம் பொது இடங்கள் துப்பரவு செய்யப்பட்டது. வீதி அபிவிருத்தி, வீதி புனருத்தாணம், குளக்கட்டு அபிவிருத்தி, விளையாட்டு மைதானம் அமைத்தல் போன்றவை மயில்வாகனம் ஐயாவின் முயற்சியால் மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறு செட்டிபாளையம் கிராமத்தின் பால் கொண்ட அக்கறையால் கிராமத்தில் காணப்பட்ட பல்வேறு குறைபாடுகளுக்கு தனது முயற்சியால் தீர்வுகளைப் பெற்றுக் கொடுத்தார். செட்டிபாளையம் கிராம அபிவிருத்தியைப் பொறுத்தவரை கவிஞர் மயில்வாகனம் ஐயாவை மறக்க முடியாது. இன்றுவரை மக்கள் மத்தியில் அவர் தனி இடம் பெற்றுள்ளார். என்பது நாமறிந்த உண்மை.
கல்விப் பணி
கவிஞ்ஞர் மயில்வாகனம் அவர்கள் ஆசிரியராக அதிபராக பல பாடசாலைகளில் மாணவர்கல்வி மேம்பாட்டிற்காக தன்னை அர்ப்பணித்துப் பணியாற்றியவர். சமூகக் கல்வி, வரலாறு, போன்ற பாடங்களை மாணவர்களுக்கு சிறப்பாகப் போதித்தவர். அக்காலத்தில் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெறுவதற்கு அவரது பங்களிப்பு அளப்பரியது. கல்வியை கலைகளோடு வளர்த்துச் சென்ற பெருமை இவரையே சாரும். மேலும் ஒழுக்கம், ஆன்மீக விழுமியங்களை மாணவர் கடைப்பிடிக்கக் காரணமாக இருந்தார். சிறந்த மாணவர் சமூகத்தை உருவாக்கிய சிறந்த சிற்பி மயில்வாகனம் ஐயா.
மேலும் பாடசாலை செல்லாது இருக்கும் பிள்ளைகளை இனங்கண்டு அவர்களது பெற்றோர்களுடன் கதைத்து அப்பிள்ளைகளை மீண்டும் பாடசாலைக்கு சேர்ப்பித்தார். அதன் பயனாக கல்வியில் அதிக மாணவர்கள் வெற்றியீட்டியுள்ளதையும் அறிய முடிகின்றது. தனது கவிதைத் தொகுதிகளில் கல்வியின் முக்கியத்துவம் பற்றி பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். இவரிடம் கல்வி பயின்ற மாணவர்கள் இன்று உயர்
பதவிகளில் இருப்பதையும் இன்றும் மயில்வாகன ஐயாவின் வழிகாட்டலிலே தான் நாம் இப்படி இருக்கின்றோம் என்று பெருமையுடன் கூறிக் கொள்வதையும் அவதானிக்க முடிகின்றது
மயில்வாகனம் ஐயா அவர்கள் மட்/தாழங்குடா ஸ்ரீ விநாயகர் வித்தியாலயத்தில் அதிபராகக் கடமையைாற்றிய காலம் அப்பாடசாலையின் பொற்காலம் என்றே கூறவேண்டும். பாடசாலை ஆளணி பௌதீக வளங்களில் நிறைவு பெற்றதோடு கல்வியிலும் சிறந்த பெறுபேறுகளை மாணவர் பெறுவதற்கு காரணமாக இருந்தார். சிறந்த தலைமைத்துவப் பண்புடன் ஆசிரியர் மாணவர்களை வழிநடாத்தியவர், அக் கிராமத்து மக்களால் மதிக்கப்பட்டவர். அவரது மரணச்சடங்கின் போது தாழங்குடா கிராம மக்கள் கதறி அழுத காட்சி கண்முன்னே நிற்கின்றது.
அவர் பிறந்து வளர்ந்த கிராமத்தில் உள்ளவர்களுக்கு அவரது வரலாறும் பெருமையும் தெரியாமல் இருக்கின்றது. என்பது கசப்பான உண்மை. இவரைப் பற்றிய தேடல்கள் தொடரப்பட வேண்டும் அவை நூலுருவாக்கம் பெற்று ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாய தேவையாகும். இன்றுள்ள சந்ததி இதனைச் செய்யாவிட்டால் எதிர் காலத்தில் அவரது நாமம் மறைந்துவிடலாம். அவரிடம் கல்விகற்ற மாணவர்கள் மற்றும் உறவினர்கள் இம்முயற்சியில் அக்கறை கொள்ள வேண்டும் என்பது என் அவா. கவிஞ்ஞர் மயிவாகனம் ஐயாவின் சேவை என்றும் நினைவுகூரப்பட வேண்டியவை.
செட்டியூர்ச் சிந்தனைச் செல்வன் அவர்களின் 36வது சிரார்த்த தினத்தை நினைவு கூருவதில் பெருமை கொள்கின்றேன்.
திருமதி மலரதேவி குருபரன்
ஓய்வுநிலை சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் செட்டிபாளையம். (வரலாறு)






















