எழுத்தாளர் அனுராதா ரமணன் பற்றிய ஒரு சில விஷயங்கள்...
சினிமா
எப்போதோ இந்த உலகத்தை விட்டுப் பிரிந்து போய்விட்ட அனுராதா ரமணனின் கண்கள் மட்டும் எங்கிருந்தோ, இதோ, இந்த விஷயத்தை இப்போது படித்துக் கொண்டு கூட இருக்கலாம்.
அப்படி ஒரு விஷயத்தை செய்து விட்டுப் போயிருக்கிறார் அனுராதா ரமணன்.
எழுத்தாளர் அனுராதா ரமணன் பற்றிய ஒரு சில விஷயங்கள்... அவற்றை தற்செயலாகத்தான் தெரிந்து கொண்டேன்.
நாங்கள் படித்த சென்னை அரசு ஓவியக் கலைக் கல்லூரியில்தான்
அனுராதா ரமணனும் படித்தாராம்.
சீனியர்.
1990 களில் 'சுபமங்களா' பத்திரிகை அலுவலகத்தில், அதன் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார் அனுராதா ரமணன். நண்பர் ஒருவரோடு சென்று சந்தித்தேன். சாதாரணமான ஒரு சந்திப்பு.
ஆனால் அந்த சந்திப்பில் ஒரு சில சுவாரஸ்யமான விஷயங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டார் அனுராதா ரமணன்.
ஓவியக் கல்லூரியில் படிப்பை முடித்த பின், அனுராதா ரமணனுக்கு எப்படியாவது, தான் ஒரு பெரிய ஓவியராக வர வேண்டும், பத்திரிகைகளில் படங்கள் வரைய வேண்டும் என ஆசையாக இருந்ததாம். தான் வரைந்திருந்த ஓவியங்களை எல்லாம் கை நிறைய அள்ளி எடுத்துக் கொண்டு ஒவ்வொரு பத்திரிகை அலுவலகமாக ஏறி இறங்கிக் கொண்டிருந்தார்.
அப்படித்தான் தினமணி கதிர் பத்திரிகை அலுவலகத்துக்கும் அவர் போயிருக்கிறார்.
அங்கே இருந்த உதவி ஆசிரியர் சி.ஆர்.கண்ணனை சந்தித்து ஓவியங்கள் வரைய வாய்ப்பு கேட்டிருக்கிறார். ஆகட்டும் பார்க்கலாம் என்று சொல்லி அனுப்பி விட்டார்கள்.
அங்கிருந்து புறப்பட்ட அனுராதா ரமணன், தான் எடுத்துக் கொண்டு போயிருந்த ஓவியங்களில் சிலவற்றை மறதியாக ஆசிரியரின் மேஜையிலேயே விட்டு விட்டு வந்து விட்டாராம்.
ஆனால் அந்த மறதி, ஒரு மகத்தான வாய்ப்பை அவருக்கு வழங்கும் என கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்கவில்லை அனுராதா ரமணன்.
தற்செயலாக அந்த ஓவியங்களை கையில் எடுத்து பார்த்த உதவி ஆசிரியர் ஆச்சரியத்தில் அதிசயித்துப் போனார். ஒவ்வொரு ஓவியத்தின் பக்கத்திலும் ஒரு சில வாசகங்களை கதை போல எழுதி வைத்திருந்தார் அனுராதா ரமணன்.
உதவி ஆசிரியர் உதடுகள் தன்னை அறியாமல் முணுமுணுத்தன.
"Very very Interesting !"
அடுத்த நிமிடமே ஃபோன் போனது அனுராதா ரமணனுக்கு. "மேடம், நீங்கள் எங்கள் பத்திரிகையில் சிறுகதைகளும் தொடர்கதைகளும் எழுதுகிறீர்களா ?"
இப்படித்தான் அனுராதா ரமணன் என்ற எழுத்தாளர் உருவானாராம்.
சிரித்தபடியே இதைச் சொல்லி முடித்தார் அனுராதா ரமணன்.
கொஞ்சம் கூட கள்ளமற்ற வெள்ளை மனம். அதுதான் அனுராதா ரமணன்.
2010 ல் இறந்து விட்டார் அனுராதா ரமணன். இனி அவரை நாம் எப்போதும் பார்க்கவே முடியாது. ஆனால் அவர் நம்மை, இந்த உலகத்தை இன்னும் நீண்ட நெடுங்காலம் பார்த்துக் கொண்டுதான் இருப்பார்.
எப்படி ?
இறந்த பின் தன் இரு கண்களையும் தானம் செய்வதற்கு ஏற்கனவே எழுதிக் கொடுத்திருந்தார் அனுராதா ரமணன்.
ஆம். அன்று சுபமங்களாவில் நான் பார்த்த அனுராதா ரமணனின் அதே அழகிய மையிட்ட கண்கள், இன்னமும் கூட உயிர்ப்போடு, இந்த உலகத்தின் அழகை யாரோ இருவர் மூலம் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றன.
யார் கண்டது ?
ஒருவேளை அந்தக் கண்கள் இந்த நேரத்தில் எங்கிருந்தோ அனுராதா ரமணனின் கதைகளை படித்துக் கொண்டு இருக்கலாம்.
இதையும் கூட படித்துக் கொண்டிருக்கலாம்
John Durai Asir Chelliah






















