தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை - திருகோணமலையில் புதிய வீடுகள் கையளிப்பு
இலங்கை
அரசாங்கத்தின் ‘தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், திருகோணமலை மாவட்ட, குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட, கும்புறுப்பிட்டி பகுதியில் வீடற்றவர்களுக்கான வீடுகளைக் கையளிக்கும் மற்றும் புதிய வீடுகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வுகள் இன்று (14) நடைபெற்றது.
கும்புறுப்பிட்டி, நாவற்சோலை பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு, அதன் பயனாளிக்கு உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
வாழைஊற்றுப் பகுதியில் புதிய வீடொன்றை அமைப்பதற்கான முதற்கட்ட அடிக்கல் நட்டு வைக்கப்பட்டது.
2015 முதல் 2019 வரையான காலப்பகுதியில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இடையில் தடைப்பட்டிருந்த 25 வீடுகளைப் பூர்த்தி செய்வதற்காக, நாவற்சோலை மற்றும் பெரியகுளம் பகுதி பயனாளிகளுக்கு மீண்டும் பணிகளைத் தொடர நிதியுதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
குச்சவெளி பிரதேச செயலாளர் எம். ஆர். சியாஉல் ஹக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா மற்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன ஆகியோர் வீடுகளையும் நிதியுதவிகளையும் பயனாளிகளிடம் கையளித்தனர்.
இந்நிகழ்வில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட தலைவர் விமல் ராஜசிங்க,தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட உதவி பொறியியலாளர் என். கஜேந்திரன், பிரதேச செயலக அதிகாரிகள், தேசிய மக்கள் கட்சியின் பிரதேச இணைப்பாளர், பிரஜா சக்தி தலைவர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
அரசாங்கத்தின் தேசிய வீடமைப்புத் திட்டத்தின் கீழ், திருகோணமலை மாவட்டத்தில் வீடற்ற பல குடும்பங்களுக்கு நிரந்தரக் கூரையை வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.























