• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஒரே கருப்பையில் பிறந்த இரட்டையர்கள்; ஆனால் தந்தை வேறு - 49 ஆண்டுகளின் பின் தெரியவந்த உண்மை

ஒரே கருப்பையில் வளர்ந்து, சில நிமிட இடைவெளியில் பிறந்தாலும், இரட்டையர்கள் இருவருக்கும் வெவ்வேறு தந்தையர் இருக்க முடியுமா? இல்லை என்று தான் கூறுவார்கள்.

ஆனால் இந்த அறிவியல் ரீதியான கேள்விக்கு 'ஆம்' என்று லண்டனைச் சேர்ந்த மிஷெல் மற்றும் லவினியா ஆஸ்போர்ன் (49 வயது) ஆகியோரின் பிறப்பு பதிலளிக்கிறது.

உலகம் முழுவதும் சுமார் 20 பேருக்கு மட்டுமே அறியப்பட்ட இந்த விசித்திர நிகழ்வு, இங்கிலாந்தில் ஆவணப்படுத்தப்பட்ட முதல் இரட்டையர்கள் என்ற பெருமையையும் இவர்களுக்கு பெற்றுத் தந்துள்ளது.

49 ஆண்டுகளாகத் தங்களை ஒரே தந்தையின் குழந்தைகள் என்று நம்பி வாழ்ந்து வந்த மிஷெலும் லவினியாவும் சிறுவயது முதல் பெற்றோர் அரவணைப்பின்றி, பல்வேறு காப்பகங்களில் வளர்ந்து வந்துள்ளனர்.

எனினும், 2022 செப்டம்பர் மாதம் லவினியா மேற்கொண்ட வீட்டில் மேற்கொள்ளும் மரபணு (at-home DNA) பரிசோதனை முடிவுகள் அவரது வாழ்க்கையையே புரட்டிப் போட்டன. குறித்த முடிவுகளின் அடிப்படையில் அவர்கள் இருவருக்கும் ஒரே தந்தை அல்ல என்பது தெரியவந்தது.

'Heteropaternal superfecundation' எனப்படும் இந்த அரிய உயிரியல் நிகழ்வு நடைபெற சில குறிப்பிட்ட காரணிகள் அமைய வேண்டும்.

ஒரு பெண் ஒரே மாதவிடாய் சுழற்சியில் ஒன்றுக்கும் மேற்பட்ட முட்டைகளை உற்பத்தி செய்ய வேண்டும். அந்த முட்டைகள் வெவ்வேறு ஆண்களின் விந்தணுக்களால் கருத்தரிக்கப்பட வேண்டும். இரண்டு கருக்களும் ஆரோக்கியமாக வளர்ந்து முழுமையான கர்ப்ப காலம் வரை நிலைத்திருக்க வேண்டும்.

உலகம் முழுவதும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே பதிவாகியிருக்கும் இந்த நிகழ்வே மிஷெல் மற்றும் லவினியா விடயத்திலும் நடந்துள்ளது. 1976 ஆம் ஆண்டில் நாட்டிங்ஹாமில் பிறந்த இவர்கள், தங்கள் தாயின் அரவணைப்பின்றி கடினமான சூழ்நிலையிலேயே வளர்ந்தனர்.

தங்கள் தந்தை 'ஜேம்ஸ்' என்று மட்டுமே அவர்கள் அறிந்திருந்தனர். எனினும், ஜேம்ஸ் மீது மிஷெலுக்கு சந்தேகம் இருந்ததால் தொடர்ந்து அவர் மேற்கொண்ட மரபணுப் பரிசோதனையில், ஜேம்ஸ் தனக்குத் தந்தை அல்ல என்பது உறுதியானது.

இதனைத் தொடர்ந்து, மிஷெல் தனது உண்மையான தந்தையைக் கண்டறிந்தார். அவர் அலக்ஸ் (Alex) என்ற நபராவார். இருப்பினும், அலக்ஸின் தற்போதைய சூழ்நிலையைக் கண்ட மிஷெல், அவருடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க விரும்பவில்லை.

ஆனால், லவினியா தனது உண்மையான தந்தையைக் கண்டறியத் தொடங்கியபோதுதான் 'ஆர்தர்' என்ற நபர் அவரது தந்தை என்பது தெரியவந்தது.

தற்போது லவினியாவும், மிஷெலும் மேற்கு லண்டனில் வசிக்கும் ஆர்தருடன் மிகுந்த நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். ஆர்தர், மிஷெலையும் தனது மகளாகவே கருதுவதாகத் தெரிவித்துள்ளார்.

நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் இணைபிரியா இரட்டையர்கள்; இந்த  உண்மை எங்களது உறவைக் குலைக்காது" என சகோதரிகள் இருவரும், " நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.
 

Leave a Reply