ஸ்கார்பரோ ரயில் நிலையங்களில் தொடர் வாகனத் திருட்டு - மூவர் கைது
கனடா
கனடாவின் ஸ்கார்பரோவில் உள்ள மூன்று GO ரயில் நிலையங்களின் வாகன நிறுத்துமிடங்களில் இடம்பெற்ற வாகனத் திருட்டுகள் தொடர்பாக ரொறன்ரோவைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. கடந்த மார்ச் 16 ஆம் திகதி காலை எக்லிண்டன் GO ரயில் நிலையத்தின் (Eglinton GO station) வாகன நிறுத்துமிடத்தில் வைத்து இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்கள் பூட்டப்பட்டிருந்த மோட்டார் வாகனம் ஒன்றிற்குள் நுழைய முயன்றதாகக் கூறப்படுகிறது.
வாகனத்தைத் திருடும் நோக்கில், புதிய சாவி ஒன்றை உருவாக்குவதற்காக வாகனச் சாவி-புரோகிராமிங் கருவியைப் (automotive key-programming device) பயன்படுத்த சந்தேக நபர்கள் முயன்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
அங்கு பணியில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் தலையிட்டு சந்தேக நபர்களைக் கைது செய்தனர். சிறிது நேரத்தின் பின்னர் மூன்றாவது நபர் ஒருவரும் காவலில் எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கில்ட்வுட் GO (Guildwood GO) மற்றும் ரூஜ் ஹில் GO (Rouge Hill GO) நிலையங்களின் வாகன நிறுத்துமிடங்களில் இடம்பெற்ற மேலதிக வாகனத் திருட்டுகளுடன் இந்த சந்தேக நபர்களுக்குத் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் வெளிப்படுத்தியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் ரொறன்ரோவைச் சேர்ந்த 43 வயதுடைய ராஜு சைதூர் (Raju Saydur), 27 வயதுடைய நபீஸ் ஹசன் (Nafees Hasan) மற்றும் 46 வயதுடைய சஜ்ஜாத் அலி (Sazzad Ali) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.






















