அமெரிக்காவில் காணாமல்போய் 32 ஆண்டுகளின் பின் மீட்கப்பட்ட சிறுமி - அவிழ்ந்த மர்ம முடிச்சு
அமெரிக்காவில் 1994-ஆம் ஆண்டு மாயமான 13 வயதுச் சிறுமி, சுமார் 32 ஆண்டுகளுக்குப் பிறகு 2026-ஆம் ஆண்டில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது .
அமெரிக்காவில் அரிசோனா மாநிலத்தின் ‘ஸ்டார் வேலி’ (Star Valley) பகுதியைச் சேர்ந்த கிறிஸ்டினா மரியா பிளான்டே (Christina Maria Plante), கடந்த 1994-ஆம் ஆண்டு மே 15-ஆம் திகதி தனது வீட்டிற்கு அருகிலுள்ள குதிரை லாயத்திற்கு நடந்து சென்றபோது மாயமானார்.
சிறுமி எவ்வித தடயமுமின்றி மாயமானதாகக் கூறி, கிலா கவுண்டி (Gila County) ஷெரிப் அலுவலகத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது. அப்போதிருந்து பல ஆண்டுகளாக சட்ட அமலாக்க முகமைகளுக்கு இச்சம்பவம் ஒரு புரியாத புதிராகவே இருந்து வந்தது.
தீவிர தேடுதல் முயற்சிகள் மற்றும் துப்பறியும் நிபுணர்களின் தொடர் நடவடிக்கைகள் தோல்வியடைந்த நிலையில், பிளான்டேவின் புகைப்படம் ‘அமெரிக்க காணாமல் போன குழந்தைகள் தரவுத்தளத்தில்’ சேர்க்கப்பட்டு, நாடு முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
காலப்போக்கில், புதிய ஆதாரங்கள் கிடைக்காததால் இது ஒரு 'மர்ம வழக்கு' (Cold Case) ஆக மாறியது. தற்போது 45 வயதாகும் கிறிஸ்டினா மரியா பிளான்டே பாதுகாப்பாக மீட்கப்பட்டு, அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஷெரிப் அலுவலகம் அறிவித்துள்ளது.
எனினும், அவரது தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் நலன் கருதி மேலதிக விபரங்கள் எதனையும் அதிகாரிகள் வெளியிடவில்லை. இது தொடர்பாக ஏப்ரல் 1-ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையில், “மேம்பட்ட தொழில்நுட்பம், நவீன விசாரணை முறைகள் மற்றும் வழக்கின் விரிவான மறுஆய்வு ஆகியவற்றின் மூலம் துப்பறியும் நிபுணர்கள் புதிய தடயங்களைக் கண்டறிந்தனர்; இதுவே இந்தத் திருப்புமுனைக்கு வழிவகுத்தது,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிலா கவுண்டி ஷெரிப் அலுவலகம், தீர்க்கப்படாத பழைய வழக்குகளை விசாரிக்கவெனத் தனிப்பிரிவை (Cold Case Unit) உருவாக்கியதை அடுத்தே பிளான்டேவின் வழக்கில் முன்னேற்றம் ஏற்பட்டது.
இந்தச் சம்பவம், பழைய வழக்குகளை மீளாய்வு செய்வதன் முக்கியத்துவத்தையும், பல ஆண்டுகளாகப் பதிலுக்காகக் காத்திருக்கும் குடும்பங்களுக்குத் தொழில்நுட்ப வளர்ச்சி எவ்வாறான தீர்வைத் தருகிறது என்பதையும் உணர்த்துகிறது, என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் சுமார் மூன்று தசாப்தங்களாக இந்த வழக்கைக் கைவிடாமல் உயிர்ப்புடன் வைத்திருந்த புலனாய்வாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் சமூக உறுப்பினர்களுக்கு ஷெரிப் அலுவலகம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.






















