48 மணி நேரத்திற்குள் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்காவிட்டால்... ஈரானுக்கு Trump கடும் எச்சரிக்கை
அமெரிக்க-இஸ்ரேல்-ஈரான் போர் 22 வது நாளை தாண்டியுள்ளது. தாக்குதல்களும் எதிர்த் தாக்குதல்களும் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. அரபு நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஈரான் வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது.
மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களை ஈரான் தாக்கி வருகிறது. இதனால் வழித்தடத்தில் கப்பல் போக்குவரத்து வெகுவாக குறைந்துள்ளது.
அதே சமயம் கத்தார், சவூதி அரேபியா நாடுகளில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை திறந்துவிடாவிட்டால் ஈரானின் மிகப்பெரிய மின் நிலையங்களை தாக்கி அழிப்போம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பதிவில், "அடுத்த 48 மணி நேரத்திற்குள், ஈரான் 'ஹார்முஸ் ஜலசந்தியை ' எவ்வித அச்சுறுத்தலும் இன்றி, முழுமையாகத் திறந்துவிடாவிட்டால், அந்நாட்டின் பல்வேறு மின் நிலையங்களைத் தாக்கி அழிக்கும்; இதில், மிகப்பெரிய மின் நிலையமே முதலாவதாகத் தாக்கப்படும்!" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் உள்ளிட்ட 22 நாடுகள், அரபு நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறும், ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்குமாறும் ஈரானிடம் வேண்டுகோள் விடுத்து கூட்டாக அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.























