• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எம்ஜிஆரைப் போல் ஊழலை ஒழிக்க முடியுமா?

சினிமா

`இதயக்கனி’ கடந்த சில பல மாதங்களாக முன்னெடுத்திருக்கும் ஒரு நிலைப்பாடு, ``ஊழலற்ற எம்.ஜி.ஆர். அரசை அமைப்போம்’’ என்பதைத் தூண்டுவதே. அதிமுக தலைமையும், நிர்வாகிகளும் `அம்மா ஆட்சி அமைப்போம்’ என்கிறார்களே, அது அவர்கள் வசதிக்கு, மீண்டும் வசதியை பெருக்குவதற்கா என்று கேட்கத் தோன்றுகிறது. கூட்டணி விஷயங்களிலேயே இழுபறி, கோட்டை விடுதல் என்று பல்வேறு சோதனைகள் அதிமுகவிற்கு. `இதயக்கனி’யில் இதுபோல் பல்வேறு விவகாரங்களை அலசினால், அதிலுள்ள சில உண்மைகள் சிலருக்கு கசப்பாக இருக்கிறது.

`இதயக்கனி’ வெற்றி விழாவின் நாயகன் எம்ஜிஆர், ஆனால் 17.2.2026 `இதயக்கனி’ 225 வது நாள் வெற்றி விழாவின் நாயகனாக எடப்பாடி திரு. பழனிச்சாமி மாறிவிட்டார். அது ஒரு அரசியல் மேடையாக, தேர்தல் பிரச்சார களமாக மாறிவிட்டது. ``யாரோ ஒருவர் தோட்டமிட, யாரோ ஒருவர் பலனை அனுபவிப்பது’’ என்பது போலாகிவிட்டது இன்றைய நடப்புகள். விழா எம்ஜிஆர் படத்தின் வெற்றிக்கானது. மேடை எம்ஜிஆருக்கானது. ஆனால் அந்த மேடையில் ``அம்மா ஆட்சி அமைப்போம்’’ என்கிறார் எடப்பாடி. பழக்க தோஷமோ?

எடப்பாடி திரு. பழனிச்சாமிக்காக `இதயக்கனி’ படத்தின் பிரச்னைக்குரிய, சர்ச்சைக்குரிய பல விஷயங்களை சரியாக தொகுத்து 20 நிமிட படமாக திரையிட்டுக் காண்பித்தனர். அதை ட்ரெய்லர் போலாக்கி, `இதயக்கனி’ படத்தினை மீண்டும் தமிழகமெங்கும் மறு வெளியீடு செய்தால், வேறு பிரச்சார முனைப்புகளே தனியாக தேவையில்லை. ஆனால் அதிமுகவினர் திரையரங்குகளில் கூட்டமாகக் கூடி படம் பார்த்தாலே அந்த ஆரவாரம் பொது மக்களையும், திரையரங்குகளுக்கு கொண்டுவந்து சேர்க்கும். இதைத்தான் நான் ஆரம்பம் முதலே சொல்லி வருகிறேன். ஆனால் `இதயக்கனி’யின் வெற்றிக்காக விழா என்ற பெயரில் சிலரது தனிப்பட்ட சுயநலம் அங்கே அரங்கேறிவிட்டது.

இருக்கட்டும். எடப்பாடி திரு. பழனிசாமி ``அம்மா ஆட்சி அமைப்போம்’’ என்பதற்கு முன்னதாக ``புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆட்சி அமைக்க சபதமேற்போம்’’ என்று சொல்லியிருந்தால் வரவிருக்கும் தேர்தலின் தொனியே மாறிப் போயிருக்கும். இதை அவருக்காக `கும்மியடிக்கும்’ பேர்வழிகளுக்கு எடுத்துச் சொல்லத் தெரியாதா? எடப்பாடி பழனிசாமி காது கேளாதவர் அல்ல. அவருக்கு சொல்லும் முறையில், புரியும் விதமாக எடுத்துச் சொன்னால் அதை அவர் உணர்ந்து நியாயம் என்று திருத்தம் செய்து சொல்வார். எம்ஜிஆரின் பெயரை ஊறுகாயாக, கேடயமாக பயன்படுத்தி குளிர்காய விரும்புவோருக்கு இது பிடிக்காது. இந்த, கபட வேடதாரிகளை அம்பலப்படுத்துவது `இதயக்கனி’யின் அடுத்த கட்ட வேலையாக இருக்கும்.

எம்ஜிஆர், என்ற சக்தி அதிமுகவை எதற்காக தொடங்கச் செய்ததோ, அதை மீண்டும் தட்டியெழுப்பி அதிர்வலைகள் ஏற்படுத்துவதே `இதயக்கனி’யின் நோக்கம். இனி ஊழலை ஒழிக்கவே முடியாது, ``போய்யா உன் வேலையைப் பாரு’’ என்று விபரம் அறிந்தவர்களே சொல்லும் காலமிது. யார் அதைச் செய்கிறார்கள் என்றால் எம்ஜிஆரை மனதார நேசிப்பவர்கள். அதாவது எம்ஜிஆர் கட்சி இருக்க வேண்டும், அது வெற்றி பெற வேண்டும், அதற்காக அவர்கள் ஊழல் செய்தால், செய்து விட்டு போகட்டும், ஊழலை யார் தடுப்பது? என்ற பகுத்தறிவற்ற மனநிலை உடையவர்கள் சமூக வலைதளங்களில் `குப்பை’ கொட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது அந்த நோக்கில் சுயநலம், ஆதாயம் தேடுதல் இருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் அதுவும் இல்லாத முட்டாள்தனமான, பகுத்தறிவற்றவர்களாக இருக்கிறார்கள்.

எம்.ஜி.ஆர் எத்தகைய மகத்தான மனிதர், நடிகர், தலைவர் - அவருக்கு பொருத்தமின்றி அவரது புகழைச் சொல்பவர்கள், `உண்மை’ தேட மனமின்றி `பொய்க்குள்’ மூழ்கி திளைக்கிறார்கள். அவர்களுக்கு உண்மை புரிய வைத்து, `ஊழலை ஒழிக்க’ பிரச்சார சக்தியாக மாற்றுவதே `இதயக்கனி’ இதழின் வெள்ளிவிழா சாதனையாக இருக்கும்.

மார்ச் 2026 'இதயக்கனி' தலையங்கத்திலிருந்து......

இதயக்கனி எஸ்.விஜயன்

Leave a Reply