• Welcome to TamilsGuide
செய்திகள் 1

திறந்த வேகத்தில் மூடப்பட்ட உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையம்

ஜப்பானில் உள்ள உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையமான காஷிவாஸாகி-கரிவா (Kashiwazaki-Kariwa) நிலையத்தில், 15 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட பணிகள் மீண்டும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

2011-ஆம் ஆண்டு ஏற்பட்ட புகுஷிமா அணு உலை விபத்திற்குப் பின்னர், ஜப்பானின் அனைத்து அணு உலைகளும் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டன.

இந்நிலையில், நிகாட்டா மாகாணத்தில் உள்ள இந்த அணுமின் நிலையத்தின் 6-வது அணு உலையை மீண்டும் இயக்குவதற்கான பணிகள் புதன்கிழமை (21) ஆரம்பிக்கப்பட்டன.

எனினும், உலை செயல்பாட்டுக்கு வந்த சில மணி நேரங்களிலேயே, அணுக்கருப் பிளவைக் கட்டுப்படுத்தும் 'கட்டுப்பாட்டு தண்டுகள்' தொடர்பான எச்சரிக்கை மணி ஒலித்ததால், பாதுகாப்பு கருதி இயக்கம் உடனடியாக இடைநிறுத்தப்பட்டது.

அணு உலை தற்போது ஆபத்தான நிலையில் இல்லை எனவும், கதிர்வீச்சு கசிவு ஏதும் ஏற்படவில்லை எனவும் அதன் செயல்பாட்டாளரான டெப்கோ (Tepco) நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட வேண்டிய இப்பணி, தொழில்நுட்பக் கோளாறு ஒன்றின் காரணமாக புதன்கிழமைக்கு மாற்றப்பட்டது.

புகுஷிமா விபத்தை ஏற்படுத்திய அதே 'டெப்கோ' நிறுவனம் இதனை இயக்குவதால், அப்பகுதி மக்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் , மறுதொடக்கத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

2050 ஆம் ஆண்டிற்குள் 'கார்பன் உமிழ்வு இல்லாத' நாடாக மாற இலக்கு நிர்ணயித்துள்ள ஜப்பான், தனது மின் தேவையை பூர்த்தி செய்ய மீண்டும் அணுசக்தியை நாட ஆரம்பித்துள்ளது.

அதேவேளை இதுவரை ஜப்பானில் உள்ள 33 அணு உலைகளில் 15 உலைகள் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளன.
 

Leave a Reply