இந்தோனேசியா, ஓமான் போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன
இலங்கை
இந்தோனேசிய மற்றும் ஓமான் கடற்படைகளுக்கு சொந்தமான இரண்டு போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
இன்று (22) காலை இந்தக் கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்ததாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இந்தோனேசிய கடற்படையின் ‘KRI SULTAN ISKANDAR MUDA – 367’ என்ற போர்க்கப்பல், விநியோக மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இக்கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்றனர்.
குறித்த கப்பலானது ‘Sigma Corvette FS’எனும் வகையைச் சேர்ந்ததுடன், 90.71 மீற்றர் நீளமாகும்.
அதன் கட்டளை அதிகாரியாக கொமாண்டர் Annugerah Anurullah செயற்படுகின்றார்.
இதேவேளை, ஓமான் அரச கடற்படையின் ‘AL SEEB’ என்ற போர்க்கப்பலும் விநியோகத் தேவைகளுக்காக இன்று (22) நாட்டை வந்தடைந்தது. இக்கப்பலையும் இலங்கை கடற்படையினர் முறைப்படி வரவேற்றுள்ளனர்.
75 மீற்றர் நீளம் கொண்ட இந்த கப்பலின் கட்டளை அதிகாரியாக லெப்டினன்ட் கொமாண்டர் ஹமத் பின் மொஹமட் அல்டார்மகி Hamad Bin Mohammed Aldarmaki செயற்படுகின்றார்.
குறித்த கப்பல்கள் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், அதன் பணிக்குழாமினர் கொழும்பை அண்மித்துள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களைப் பார்வையிட உள்ளனர்.
இந்த விஜயமானது இரு நாட்டு கடற்படைகளுக்கும் இடையிலான தொழில்முறை அறிவைப் பகிர்ந்து கொள்ளவும், பரஸ்பர புரிந்துணர்வை மேம்படுத்தவும் உதவும் என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.























