ட்ரம்ப்பின் கிரீன்லாந்து கனவுக்கு டென்மார்க் கொடுத்த பதிலடி
கனடா
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கிரீன்லாந்தை கைப்பற்றுவதற்கு முயற்சிப்பதைக் கண்டித்து, டென்மார்க் நாடாளுமன்ற உறுப்பினர் ஆண்டர்ஸ் விஸ்டிசென் (Anders Vistisen) ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் காரசாரமாகப் பேசிய செய்தி தற்போது உலகளவில் வைரலாகி வருகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டவாக்க சபையில் இடம்பெற்ற விவாதத்தின் போது, டென்மார்க் நாடாளுமன்ற உறுப்பினர் ஆண்டர்ஸ் விஸ்டிசென், அதிபர் ட்ரம்ப்பை நேரடியாகக் கடுமையாகச் சாடினார்.
அவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ட்ரம்ப் அவர்களே, கவனமாகக் கேளுங்கள். கிரீன்லாந்து கடந்த 800 ஆண்டுகளாக டென்மார்க் இராச்சியத்தின் ஒரு அங்கமாக உள்ளது.
அது ஒரு தனி நாடு, விற்பனைக்கு அல்ல," என்று கூறினார். பேச்சின் இறுதியில், "உங்களுக்குப் புரியும் மொழியில் சொல்கிறேன் மிஸ்டர் பிரசிடெண்ட், எனக் கூறி கடுமையான வார்த்தைகளை பிரயோகித்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சபை விதிகளை மீறி தகாத வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக, சபையின் துணைத் தலைவர் நிக்கோலாய் ஸ்டெபானுடா (Nicolae Stefanuta) அவரை உடனடியாகக் கண்டித்தார்.
உணர்ச்சிகளை வெளிப்படுத்த அரசியலில் இடமிருந்தாலும், சபையில் இத்தகைய மொழியைப் பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது என அவர் எச்சரித்தார்.
கிரீன்லாந்து விவகாரத்தில் ட்ரம்ப் நிர்வாகம் எடுத்து வரும் தீவிர நடவடிக்கைகள் ஐரோப்பிய நாடுகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.
மேலும், கிரீன்லாந்தை விட்டுக்கொடுக்காத டென்மார்க்கிற்கு ஆதரவு வழங்கும் 8 ஐரோப்பிய நாடுகள் மீது 25% வரை இறக்குமதி வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
தாதுக்கள் நிறைந்த கிரீன்லாந்து, அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பின் பாதுகாப்புக்கு மிக முக்கியம் என்றும், ரஷ்யா மற்றும் சீனாவின் ஆதிக்கத்தைத் தடுக்க இது அவசியம் என்றும் ட்ரம்ப் பிடிவாதம் பிடித்து வருகிறார்.
இந்த நிலையில், "யாராவது எங்கள் எல்லைக்குள் அத்துமீறினால், முதலில் சுடுவோம், பிறகுதான் பேசுவோம்" என்ற ரீதியில் டென்மார்க் தனது ராணுவக் கொள்கையை மீள வலியுறுத்தியுள்ளது.
இந்த மோதலால் அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையிலான உறவில் பாரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. நேட்டோ அமைப்பின் எதிர்காலமே கேள்விக்குறியாகும் நிலைக்கு இந்த "கிரீன்லாந்து விவகாரம்" தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






















