• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்

இலங்கை

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான முன்மொழியப்பட்ட சட்ட வரைபு தொடர்பான திறந்த கலந்துரையாடல் சட்டம் மற்றும் கொள்கைகளுக்கான யாழ்ப்பாணக் கற்கை நிலையத்தின் ஒருங்கிணைப்பில், நேற்று தந்தை செல்வா கலையரங்கில் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில் அரசியற் பிரமுகர்கள் சமூக செயற்பாட்டாளர்கள், இளையோர் மற்றும் மகளீர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என ஏறத்தாழ 100 பேரளவில் பங்குபற்றியிருந்தனர்.

தொடக்க உரையாற்றிய அந் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி கலாநிதி.க. குருபரன் (யாழ் பல்கலை சட்டத்துறை முன்னாள் தலைவர்) பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உறுதியளித்திருந்ததைத் சுட்டிக்காட்டி, மேலும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குகின்ற விடயமானது என்.பி.பியின் சிங்கள மொழி மூல தேர்தல் விஞ்ஞானபத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை என்னும் விடயத்தினை ஜே.வி.பியின் ஆரம்பகால உறுப்பினர் லயனல் போபகேயின் அண்மைய கட்டுரையில் உள்ள விடயத்தினையும் மேற்கோள்காட்டி, பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கி புதியதொரு சட்டத்தினைக் கொண்டு வர என்.பி.பி அரசாங்கம் தயக்கத்தோடு முன்வந்திருப்பதனை சுட்டிக்காட்டியிருந்தார்.

தமிழர் தரப்பினுடைய நிலைப்பாடு பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதும் அதற்குப் பதிலீடாக வேறெந்தச் சட்டமும் தேவையானது அல்ல என்பதைக் கோடிட்டுக் காட்டினார். மேலும் தற்போது நிலவுகின்ற தண்டனைச் சட்டக்கோவை, குற்றவியல் நடைமுறைக் கோவை மற்றும் இதர குற்றவியல் சட்டங்களின் ஏற்பாடுகளில் பேருக்குப் பின்னரான சமூக நிலைமை கையாளப்படக் கூடியது, அதற்கென தனித்து பயங்கரவாத தடைச்சட்டம் என்ற பெயரில் ஒரு சட்டம் தேவையில்லையெனக் குறிப்பிட்டார்.

சர்வதேசச் சட்டத்தில் இதுவரை ஏற்கப்பட்ட பயங்கரவாதமென்ற சொற்தொடருக்கான வரைவிலக்கணம் இல்லை என்பதனையும் சுட்டிக்காட்டிய குருபரன் குறித்த சட்டத்திலே பயங்கரவாதத்திற்கான வரைவிலக்கணமானது மிகவும் நெகிழ்வுப் போக்கான நிலையிலே அனைத்தையும், எதையும் உள்வாங்கலாம் என்ற தொனியிலே முன்வைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவுகளைப் பிறப்பித்தல், பொதுமக்கள் ஒன்றுகூடக் கூடாதென்ற அறிவித்தலை வழங்கல், கூட்டத்தைக் கூட்டுவதற்குத் தடை விதித்தல் போன்ற அவசரகால தடைச் சட்டத்தின் தற்காலிகக் கட்டளைகளை மேற்கொள்ளும் விடயங்களைக் கூட நிதந்தரச் சட்டமாகக் கொண்டு வருவதற்கு முயற்சிக்கப்படுகின்றதென சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து கருத்துரைத்த அவையினர், அரகலய போராட்டத்தின் பயனாக உருவாகிய அரசாங்கம் மீண்டும் ஒரு அரகலய உருவாகுவதனைத் தடுக்கும் விதமாக இந்தச் சட்டத்தினை உருவாக்குவதாகவும், தமிழ் மக்களினுடைய அரசியற் போராட்டத்தினை நீர்த்துப் போகச் செய்ய வேண்டும் என்ற காரணத்தினால் அச்சுறுத்தும் பாணியிலான சட்ட ஏற்பாடுகளைக் கொண்டதாக முன்மொழியப்பட்ட சட்ட வரைபு கொண்டிருப்பதாக, குறித்த சட்ட வரைபினை தமிழ் மக்கள் முற்றுமுழுதாக நிராகரிக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டு இலங்கைத் தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும், கட்சியின் தேர்வு நிலைத் தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வேலன் சுவாமிகள், வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சர்வேஸ்வரன், குரலற்றவர்களின் குரல் மு.கோமகன், கிராமிய உழைப்பாளர் சங்கத் தலைவர் இன்பம், யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைவர் யசோதரன், சமூக செயற்பாட்டாளர் முரளிதரன் உள்ளிடோர் சமூக அரசியற் செயற்பாட்டாளர் கருத்துத் தெரிவித்தனர்.
 

Leave a Reply