வரலாறு, சித்திரக்கலை பாடங்களிலிருந்து தமிழர்களின் வரலாறு குறித்த விடயங்கள் நீக்கப்படவில்லை – பிரதமர்
இலங்கை
வரலாறு மற்றும் சித்திரக்கலை ஆகிய பாடங்களிலிருந்து தமிழர்களின் வரலாறு மற்றும் கலைப் படைப்புகள் குறித்த விடயங்கள் நீக்கப்படவில்லை எனப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் பத்மநாதன் சத்தியலிங்கம் மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகியோரின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது மேலும் விளக்கமளித்த பிரதமர்,
யாழ்ப்பாண மாவட்டத்தின் எழுவைதீவில் இரண்டு பாடசாலைகள் உள்ளன.
1999ஆம் ஆண்டிலிருந்து இந்தப் பாடசாலைகள் பரீட்சை நிலையங்களாகப் பயன்படுத்தப்படவில்லை.
இந்தப் பாடசாலைகளின் மாணவர்கள் சாதாரண தரப் பரீட்சைக்காகக் காரைதீவில் அமைந்துள்ள சென். அந்தோனிஸ் கல்லூரியின் பரீட்சை நிலையத்திலேயே தோற்றுகின்றனர்.
எழுவைதீவிலுள்ள பாடசாலைகளில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்த எண்ணிக்கையாக இருப்பதால், அவை பரீட்சை நிலையங்களாகப் பேணப்படவில்லை. புள்ளிவிவரப்படி, 2022இல் 10 மாணவர்களும், 2023இல் 8 மாணவர்களும், 2024இல் 5 மாணவர்களுமே சாதாரண தரப் பரீட்சைக்காக விண்ணப்பித்துள்ளனர்.
எனவே, இந்தப் பாடசாலைகள் பரீட்சை நிலையங்களாகப் பயன்படுத்தப்படாமல், மிக அண்மையிலுள்ள பரீட்சை நிலையத்திற்கு மாணவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அந்த மாணவர்களுக்குக் காரைதீவுத் தீவில் அமைந்துள்ள பரீட்சை நிலையத்திற்குச் செல்லத் தேவையான போக்குவரத்து வசதிகள் குறித்தும் நாம் கவனம் செலுத்துகின்றோம்.
அதேபோல், தற்போது நடைமுறையிலுள்ள வரலாற்றுப் பாடத்தில் தமிழ் மன்னர்கள் குறித்து உள்ளடக்கப்பட்டுள்ளது.
பத்தாம் தரத்தின் ஏழாவது பாடத்தில் அதற்கென ஓர் அத்தியாயம் ஒதுக்கப்பட்டுள்ள அதேவேளை, பத்தாம் தரத்தின் பத்தாவது பாடத்தில் யாழ்ப்பாண இராச்சியம் பற்றிய ஓர் அத்தியாயமும் சேர்க்கப்பட்டுள்ளது.
அதில் சங்கிலி மன்னன் ஆட்சி செய்த காலம் குறித்தும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
புதிய கல்வி மறுசீரமைப்பின் கீழ், நாம் தற்போது ஆறாம் ஆண்டுக்கான வரலாறு பற்றிய புதிய பாடத்திட்டங்களைத் தயாரித்துள்ளதுடன், அதில் சங்கிலி இராச்சியத்தின் படமும் சேர்க்கப்பட்டுள்ளது. வரலாற்றை ஒரு பாடமாகக் கற்பிக்கும்போது சிங்களம் மற்றும் தமிழ் எனப் பிரித்துக் கற்பிக்கப்படுவதில்லை.
இலங்கையின் வரலாறு என்ற வகையில் பல்வேறு காலப் பகுதிகளில் மன்னர்கள் மற்றும் இராச்சியங்கள் குறித்துக் கற்பிக்கப்படுகின்றன.
இலங்கையின் வரலாற்றைப் பாதுகாப்பதிலும், காட்சிப்படுத்துவதிலும் முன்னோடியான தேசிய அருங்காட்சியகத் திணைக்களம், தமிழர் வரலாற்றைக் காட்சிப்படுத்துவதற்காகக் காட்சிக்கூடங்களில் இடங்களை ஒதுக்கியுள்ளது. கொழும்பு அருங்காட்சியகத்தின் கல் புராதனப் பொருட்கள் கூடங்களில், நான்கு தமிழ்த் தூண் கல்வெட்டுகளும், இரண்டு தமிழ்க் கல்வெட்டுக் கடிதங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் கல்வெட்டுகள், இந்தியாவின் இராசராச மற்றும் இராஜேந்திராதிராச மன்னர்களின் இலங்கைப் பிரதிநிதிகளாலும் ஆரியச்சக்கரவர்த்தி ஆரியர்களாலும் நிறுவப்பட்ட கல்வெட்டுகளாகும். மேலும், கொழும்பு தேசிய அருங்காட்சியகத்தில் உள்ள தமிழ்க் கல்வெட்டுகள் குறித்த தகவல்களை உள்ளடக்கிய ஒரு நூல் பேராசிரியர் எஸ். பத்மநாதன் அவர்களால் எழுதப்பட்டுள்ளதுடன், திணைக்களத்தின் வெளியீட்டுப் பிரிவினால் விற்பனை செய்யப்படுகின்றது. அதேபோல, இந்து மதத்தைச் சேர்ந்த சிவன், பார்வதி, நடராசர், சுந்தரமூர்த்தி உள்ளிட்ட கல் மற்றும் வெண்கலச் சிலைகளும் சிற்பங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இவை தவிர, யாழ்ப்பாண இராச்சியத்தில் பயன்படுத்தப்பட்ட சேது நாணயங்களின் தொகுப்பு ஒன்று பாதுகாப்பாகச் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. கொழும்பு தேசிய அருங்காட்சியகத்தில் உள்ள சங்க காலத்தைச் சேர்ந்த சோழ மற்றும் பாண்டிய நாணயங்கள் குறித்து கலாநிதி கிருஷ்ணமூர்த்தி மற்றும் சேனரத் விக்ரமசிங்க ஆகியோரால் எழுதப்பட்ட ஒரு நூலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
சித்திரக்கலை பாடமானது நடைமுறைச் செயற்பாடுகள் மற்றும் சிறந்த கலைப் படைப்புகளைக் கற்பதற்கான ஒரு பாடமாகும். இந்தப் பாடத்திட்டத்தைத் தயாரிக்கும்போது குறிப்பாகச் சர்வ தேசிய, சர்வ மத மற்றும் சர்வ பௌதிக கலைப் படைப்புகளை உள்ளடக்கிய சர்வதேசத் தரம் கவனத்தில் கொள்ளப்பட்டது.
அத்தோடு, சித்திரக்கலை பாடத்தின் மறுசீரமைப்பின்போது இந்த விடயத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அவர்கள் தெரிவித்தார்.






















