• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இளையராஜாவுக்கு இழப்பீடு - டியூட் படத்தில் மீண்டும் இடம்பெறும் கருத்த மச்சான் பாடல்

சினிமா

நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், சரத்குமார், மமிதா பைஜு உள்ளிட்டோர் நடித்த 'டியூட்' திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்த 'கருத்த மச்சான்', '100 வருஷம்' ஆகிய பாடல்கள் அனுமதியில்லாமல் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் இளையராஜா வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, படத்தயாரிப்பு நிறுவனம் தரப்பில், இந்த பாடல்கள் மீதான உரிமையை எக்கோ நிறுவனத்திடம் இருந்து சோனி நிறுவனம் பெற்றுள்ளது. சோனி நிறுவனத்திடம் இருந்து தாங்கள் அனுமதி பெற்றோம் என்று கூறப்பட்டது.

அதற்கு இளையராஜா தரப்பு, ''படம் வெளியானதும் தயாரிப்பு நிறுவனத்துக்கு இளையராஜா தரப்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது" என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, நீதிபதிகள், இளையராஜா பாடல்களின் புனிதத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் 'கருத்த மச்சான்' பாடலை நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையில் டியூட் பட விவகாரத்தில் இளையராஜாவுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டது என்றும் டைட்டில் கார்டில் நன்றி தெரிவிக்கப்படும் என மைத்திரி மூவி மேக்கர் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் பதில் அளித்தது.

இரு தரப்பினரும் சமரசத்திற்கு ஒப்புக்கொண்டதால், வழக்கை முடித்து வைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். 
 

Leave a Reply