ஒரு தொகை உதவிப் பொருட்களுடன் கொழும்பை வந்தடைந்த பங்களாதேஷ் விமானம்
இலங்கை
பங்களாதேஷிலிருந்து பேரிடர் நிவாரண உதவிகளின் முதல் தொகுதி இன்று (03) பிற்பகல் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடைந்தது.
அதன்படி, பங்களாதேஷ் விமானப்படையின் சி-130 போக்குவரத்து விமானம், இலங்கையில் அண்மைய பாதகமான வானிலையால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்காக மருந்துகள், உலர் உணவுப் பொருட்கள், நுளம்பு வலைகள் மற்றும் தேடல் மற்றும் மீட்பு உபகரணங்கள் உள்ளிட்ட 9,227 கிலோ கிராம் அத்தியாவசியப் பொருட்களை சுமந்து வந்தது.
இந்த விமானம் இன்று அதிகாலை டாக்காவிலிருந்து புறப்பட்டு மதியம் 1:00 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியது.
இந்தப் பொருட்களைப் பெறுவதற்காக இலங்கைக்கான பங்களாதேஷின் உயர் ஸ்தானிகர் ஆண்டலிப் எலியாஸ், உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள் மற்றும் இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் முப்படைகளின் பிரதிநிதிகள் விமான நிலையத்தில் இருந்தனர்.
























