தகவல் தொடர்பு வலையமைப்புகள் நாளை முழுமையாக சீரமைக்கப்படும் – பிரதி அமைச்சர் நம்பிக்கை
இலங்கை
அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட நாட்டின் தொலைபேசி மற்றும் இணைய தொடர்பு வலையமைப்பை நாளைய தினமளவில் முழுமையாக சீரமைக்க முடியும் என டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார்.
டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு மற்றும் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்கள் என்பன இதற்காக கடுமையாக உழைத்து வருவதாக பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இது குறித்து நேற்று (02) கருத்துத் தெரிவித்த பிரதிஅமைச்சர் மேலும் கூறியதாவது:
மண்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக 11 மாகாணங்களில் பைபர் வலையமைப்புகள் துண்டிக்கப்பட்டன.
எமது அமைச்சின் நேரடி தலையீட்டால் 09 இடங்களை 24 மணி நேரத்திற்குள் சீரமைக்க நடவடிக்கை எடுத்தோம்.
தற்போது, அனைத்து மாகாணங்களையும் இணைப்பதன் மூலம் தொலைத்தொடர்பு செயல்முறை புதுப்பிக்கப்பட்டுள்ளன.
ஒரு சில இடைப்பட்ட பிரதேசங்களைத் தவிர, ஏனைய இடங்களில் பைபர் வலையமைப்பின் ஊடாக தொடர்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.
வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் ஏற்பட்ட மின்சாரத் தடை மற்றும் பைபர் துண்டிப்பு காரணமாக 4000 க்கும் மேற்பட்ட பிரதான மின்மாற்றி கோபுரங்கள் செயலிழந்தன.
இதுவரை, அவற்றில் சுமார் 2800 கோபுரங்கள் மீளசெயற்பாட்டு நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
எஞ்சியுள்ள 949 கோபுரங்கள் மின் தடை காரணமாக செயலிழந்துள்ளன.
எஞ்சிய அனைத்து இடங்களையும் சீரமைக்க தொலைத்தொடர்பு நிறுவனங்கள் துரிதமாக செயல்பட்டு வருகின்றன.
தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கான மின்சார வசதிகளை வழங்க முப்படைகள் முழுமையான ஆதரவை வழங்கி வருகின்றன.
நவம்பர் 28 ஆம் திகதியன்று இந்த பேரழிவு ஏற்பட்ட உடன் மக்கள் உடனடியாக தொலைபேசி வலையமைப்புகளின் ஊடாக தொடர்பாடல் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்ட போதும் SMS அனுப்பும் வசதியை செயல்படுத்த தேவையான தொழில்நுட்பத்தை பெற்றுக் கொடுக்க நாங்கள் நடவடிக்கை எடுத்தோம்.
இருப்பினும், 29 ஆம் திகதி பெரும்பாலான பைபர் இணைப்புகள் நிறுவப்பட்டதால், அந்தத் தேவை எழவில்லை.
தற்போது, நுவரெலியா, பதுளை, புத்தளம் மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளில் நெருக்கடி நிலை உள்ளன.
அந்தப் பகுதிகளில், நுவரெலியா மற்றும் கண்டியில் குறிப்பிடத்தக்க அளவிலான சிக்கல்கள் உள்ளன.
இருப்பினும், நாளை (இன்று) காலையளவில் நுவரெலியா மற்றும் புத்தளம் மாவட்டங்களில் 75% க்கும் அதிகமான இணைப்புகளை செயல்படுத்த எதிர்பார்க்கிறோம்.
கண்டியில் தற்போது 65% வீதமானவை சீரமைக்கப்பட்டுள்ளதோடு அதனை நாளை (இன்று) காலைக்குள் 70% ஆக அதிகரிக்க எதிர்பார்க்கிறோம்.
தமது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தவும் தகவல்களைப் பெறவும் தொலைத் தொடர்பாடல் அவசியம்.
தற்போது அதில் 80% க்கும் அதிகமானவை சீரமைக்கப்பட்டுள்ளன.
நாளை மறுதினத்திற்குள்(நாளை) 100% முழுமையாக சீரமைக்க முடியும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.























