போதைப்பொருள் கடத்தலில் சிறை தண்டனை பெற்ற ஹோண்டுராஸ் முன்னாள் அதிபருக்கு மன்னிப்பு வழங்கி விடுவித்த டிரம்ப்
அமெரிக்காவிற்குள் 400 டன் கோகைன் கடத்த உதவியதற்காக கடந்த வருடன் 45 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஹோண்டுராஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ஜுவான் ஆர்லாண்டோ ஹெர்னாண்டஸ்க்கு டொனால்டு டிரம்ப் தனது அதிபர் பதவியை பயன்படுத்தி மன்னிப்பு வழங்கி உள்ளார்.
இதன்மூலம், அமெரிக்காவின் மேற்கு வர்ஜீனியாவில் உள்ள சிறையில் இருந்து ஜுவான் ஆர்லாண்டோ விடுவிக்கப்பட்டு, மீண்டும் ஒரு சுதந்திர மனிதராகிவிட்டதாக அவரது மனைவி சமூக ஊடகங்களில் அறிவித்தார்.
இதற்கிடையில், அமெரிக்க சிறைச்சாலைத் துறையும் நேற்று, ஜுவான் ஆர்லாண்டோ விடுவிக்கப்படும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
ஹோண்டுராஸில் நடக்க உள்ள தேர்தலில் டிரம்ப், ஜுவான் ஆர்லாண்டோவின் கட்சியை ஆதரிக்கிறார். எனவே இந்த மன்னிப்பு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
வெனிசுலா உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளில் செயல்படும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளுக்கு எதிராக டிரம்ப் கடுமையாக எதிர்வினை ஆற்றி வரும் நிலையில் ஆர்லாண்டோவுக்கு மன்னிப்பு வழங்கி உள்ளது பேசுபொருளாகி உள்ளது.






















