ஆண்டுக்கு 6 மாதம் மட்டும் வேலை, நல்ல சம்பளம்
குறைந்த வேலை;
கைநிறைய சம்பளம்...
நம்மில் பலரது கனவு இதுவாகத்தான் இருக்கும். ஆனால் இதுவெல்லாம் கனவில் மட்டுமே நடக்கும்.
இப்படித்தான் நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம். உண்மையில் அப்படி ஒரு வேலை இருக்கிறது. ஆ... அப்படியா... எங்கே?
நம்மை ஆச்சர்யத்தில் வாய்பிளக்க வைக்கும் அந்த வேலை பற்றி பார்ப்போம்.
அயர்லாந்து நாட்டின் மேற்கு கடற்கரையில் உள்ள கெர்ரி கவுண்டியில் அமைந்துள்ள ஒரு குட்டித் தீவுதான் 'கிரேட் பிளாஸ்கெட்' தீவு. 1953-ம் ஆண்டு முதல் இங்கு மக்கள் வசிக்கவில்லை. இருப்பினும், அந்த தீவு சுற்றுலாத் தலமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையில் இந்த தீவுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த தீவுக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து படகு மூலமாக மட்டுமே செல்ல முடியும்.
இயற்கையான சூழலில், அமைதியை தேடுபவர்களுக்கும், இயற்கை அழகை ரசிப்பவர்களுக்கும் சொர்க்கமாக இந்த இடம் உள்ளது. மின்சார வசதி இல்லாமல் கற்கால வாழ்க்கையை இங்கு அனுபவிக்கலாம். சுற்றுலா வருபவர்கள் தாங்கள் ஏற்படுத்தும் குப்பைகளை திரும்பி செல்லும்போது அவர்களுடனேயே எடுத்து செல்லவேண்டும் என்றால் பாருங்களேன்.
அப்படி சுற்றுலா செல்லக்கூடிய பயணிகளை வரவேற்கவும், அவர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்கவும், தங்குவதற்கான ஏற்பாடுகளை ஏற்படுத்திக் கொடுத்து உபசரிக்கவும் 2 பேருக்கு நல்ல சம்பளத்தில் வேலை கொடுக்கப்படுகிறது.
இந்த தீவில் குடியிருப்புகள் வைத்திருக்கும் குடும்பத்தினரும், தனியார் நிறுவனங்களும் சேர்ந்துதான் இந்த வேலையை இவர்களுக்கு வழங்குகிறார்கள். சம்பளத்துடன் தங்குவதற்கும், உணவும் இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்த பணியில் சேருபவர்களுக்கு நல்ல சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால் அதுபற்றிய விவரங்களை கொடுப்பவர்களும், வாங்குபவர்களையும் தவிர வேறு யாருக்கும் தெரியாத வகையில் இன்றுவரை பின்பற்றி வருகின்றனர். இந்த 6 மாதங்களில் சுமார் 6 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரையிலான எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். அப்படி வருபவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை இந்த 2 பேர்தான் செய்துகொடுக்கவேண்டும்.
பெரிய சவால் நிறைந்த பணிக்கு ஒவ்வொரு ஆண்டும் 2 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். அது கணவன்-மனைவியாகவோ, நண்பர்களாகவோ இருக்கலாம்.
அதன்படி, இந்த ஆண்டில் காமில்-ஜேம்ஸ் தம்பதியினர் பணியாற்றியுள்ளனர்.
இந்த பணிக்கு உலகம் முழுவதிலும் இருந்து யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். ஜனவரியில் இதற்கான விண்ணப்பம் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்த தீவு பற்றிய வீடியோவும், இந்த பணிகள் குறித்தும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. அதற்கு பலரும் பல்வேறு விதமான கருத்துகளை பதிவு செய்திருக்கின்றனர்.
சிலர் எனக்கு சம்பளம்கூட தேவையில்லை, அங்கேயே தங்கி பணிபுரிய வாய்ப்பு மட்டும் கொடுங்கள் போதும் என்றும், இது வரமா? சாபமா? என்றும், இப்படி ஒரு நிம்மதியான வாழ்க்கை வேறு எங்கும் கிடைக்காது என்றும் பதிவு செய்துள்ளனர்.























