பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு உதவ முன்வந்துள்ள நாடுகள்
இலங்கை
பல உலகத் தலைவர்கள் ஜனாதிபதியிடம் தமது அனுதாபத்தை தெரிவித்ததோடு தொடர்ச்சியாக ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளனர்.
நூற்றுக்கணக்கான உயிர்களைப் பலியெடுத்து, இலட்சக்கணக்கான மக்களை இடம்பெயரச் செய்த டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவிலிருந்து நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கு சர்வதேச மட்டத்தில் தொடர்ந்து பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது.
பாதிக்கப்பட்ட மக்கள், அவர்களின் வீடுகள், சொத்துக்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகள் விரிவடைந்து வரும் நிலையில், உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளன. எமது நாட்டின் பிரதான நட்பு நாடுகள் நேரடியாக தலையிட்டு உதவி வருகின்றன. பல உலகத் தலைவர்களும் சர்வதேச அமைப்புகளும் கடந்த தினங்களில் ஜனாதிபதியுடன் தொலைபேசி ஊடகவும் வேறு வழிகளிலும் தொடர்பு கொண்டு தங்கள் அனுதாபத்தையும், மீளக் கட்டியெழுப்புவதற்கான தங்கள் ஆதரவையும் தெரிவித்துள்ளன.
இந்தியா
தற்போதைய நிலைமையை துரிதமாக சீரமைப்பதற்கு இந்தியா உதவி அளித்து வருகிறது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்ததோடு, இந்த கடினமான வேளையில் இலங்கை மற்றும் அதன் மக்களுடன் இந்தியா தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் என்றும் உறுதியளித்தார்.
நிவாரண உதவிகளை வழங்குவதற்கும், மீட்பு மற்றும் புனரமைப்பு முயற்சிகளுக்காக சாகர் பந்து செயற்பாட்டின் கீழ் தொடர்ந்து உதவி அளிப்பதற்கும், இலங்கையின் மீள்கட்டமைப்பில் தேவையான அனைத்து ஆதரவை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். முதலில், இந்திய INS விக்ராந்த் மற்றும் INS உதயகிரி ஆகிய கடற்படைக் கப்பல்கள் மூலம் நாட்டிற்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டதோடு தொடர்ந்து உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
பாகிஸ்தான்
பாகிஸ்தானும் தனது ஆதரவை வழங்கி வருவதோடு தமது கடற்படையின் PNS SAIF கப்பல் ஊடாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை வழங்கி வருகிறது.
அமெரிக்கா
ஆற்றங் கரைகளை வலுப்படுத்தவும், நீர் மட்ட உயர்வைக் கட்டுப்படுத்தவும் அமெரிக்கா 20,000 பொலிசெக் உரைகளை நன்கொடையாக வழங்கியது. அதே நேரத்தில் ஜெனரேட்டர்கள், அடுப்புகள், தண்ணீர் தொட்டிகள் மற்றும் கூடாரங்களை உலக உணவுத் திட்டத்தின் (WFP) ஊடாக வழங்க உள்ளது.
தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க விசேட பிரதிநிதி செர்ஜியோ கோர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் நடத்தியதோடு அமெரிக்காவின் தொடர்ச்சியான ஆதரவுக்கு இலங்கை சார்பாக ஜனாதிபதி நன்றியைத் தெரிவித்தார். தற்போதைய அனர்த்த நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகத் தெரிவித்த கோர், அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். மேலும் இந்த கடினமான நேரத்தில் இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்து துணை நிற்கும் என்பதை வலியுறுத்தினார்.
இலங்கை அண்மைக் காலத்தில் மிக மோசமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் இதன் பொது சுட்டிக்காட்டப்பட்டது.
அவுஸ்திரேலியா
அனர்த்த நிலைமையில் துரித மீட்பு மற்றும் மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளுக்கு ஒரு மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை வழங்க அவுஸ்திரேலியா உறுதியளித்தது.
அதே சமயம் நேபாளமும் நிவாரண முயற்சிகளுக்கு 200,000 அவுஸ்திரேலிய டொலர்களை பங்களிப்பதாக அறிவித்துள்ளது.
மாலைதீவு
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை சமூகத்திற்கு மாலைதீவு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. 50,000 அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்கவும் இடம்பெயர்ந்தவர்களுக்காக 25,000 டின்மீன்களை நன்கொடையாக வழங்கவும் மாலைதீவு உறுதியளித்துள்ளது.
இது தவிர மாலைதீவில் உள்ள இலங்கை வர்த்தக சமூகம் தற்போதைய மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு உதவுவதற்காக 33,000 அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.
இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகமும் மீட்பு, அவசர உதவி வழங்கல் மற்றும் துரித மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளுக்காக உதவி வழங்கி வருவதோடு தேவையான ஒருங்கிணைப்புகளை மேற்கொண்டு வருகிறது.
சீனா
சீன செஞ்சிலுவை சங்கமானது, இலங்கை செஞ்சிலுவை சங்கத்திற்கு ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்களை அவசர நிதி உதவியாக வழங்கியுள்ளதாக கொழும்பிலுள்ள உள்ள சீன தூதரகம் அறிவித்துள்ளது.
மேலும், பேரிடர் நிவாரண முயற்சிகளை மேலும் வலுப்படுத்த, இலங்கையில் உள்ள சீன வர்த்தக சபை மற்றும் வெளிநாட்டு சீன சங்கம் ஆகியவை நன்கொடை திட்டங்களையும் ஆரம்பித்துள்ளன.
இந்த இரு அமைப்புகளும் இணைந்து அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் 10 மில்லியன் இலங்கை ரூபாவினை திரட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியா
இதேவேளை டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக பிரித்தானிய அரசாங்கம் 8 இலட்சத்து 90 ஆயிரம் அமெரிக்க டொலரினை நன்கொடையாக வழங்கியுள்ளது.
நேபாளம்
இதேவேளை நாட்டில் ஏற்பட்ட தொடர்ச்சியான தாக்கங்களைக் கருத்திற் கொண்டு, உடனடி மீட்பு நடவடிக்கைகளுக்காக நேபாள அரசாங்கம் இலங்கைக்கு 2 இலட்சம் டொலர் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.
இதற்கிடையில், துருக்கி, கியூபா, பங்களாதேஷ், ஐரோப்பிய ஒன்றியம், பலஸ்தீனம் மற்றும் நிகராகுவா உள்ளிட்ட பல நாடுகளும், பல சர்வதேச பங்காளிகளும் இந்த அனர்த்தம் மற்றும் மறுசீரமைப்பு முன்னெடுக்கப்படும் இந்த நிலைமையில் இலங்கைக்கு ஆதரவு வழங்குவதாக உறுதியளித்துள்ளன .
அனர்த்த முகாமைத்துவத்திற்காக கிடைக்கும் இந்த இராஜதந்திர கூட்டாண்மை மற்றும் வலய ஒத்துழைப்பு இலங்கையின் மீளமைப்பு முயற்சிகளை துரிதப்படுத்தி வலுப்படுத்தி வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகள், வாழ்வாதாரங்கள் மற்றும் அத்தியாவசிய உள்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் கட்டியெழுப்பும் செயல்பாட்டில் இந்த சர்வதேச ஆதரவு மிகவும் முக்கியமானது.






















