ட்ரம்பிற்கு எதிராக வெடித்த கண்டனம் - விடுக்கப்பட்ட கோரிக்கை
வெனிசுலா, மெக்சிகோ உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார்.
குறிப்பாக, வெனிசுலாவில் இருந்து கடல் வழியாக அதிக அளவில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக தெரிவித்த ட்ரம்ப், கடல் வழியாக போதைப்பொருள் கடத்தி வரும் கும்பல் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க கடற்படைக்கு உத்தரவிட்டார்.
இதற்கிடையில், வெனிசுலா வான்பரப்பை விமான நிறுவனங்கள் பயன்படுத்த வேண்டாம் என்று ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “விமான நிறுவனங்கள், விமானிகள், போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள், மனிதக் கடத்தல் கும்பல்கள் உள்ளிட்ட அனைவரும் புரிந்து கொள்ளுங்கள், வெனிசுலா நாட்டின் வான்பரப்பு முழுவதுமாக மூடப்பட உள்ளது” என்று பதிவிட்டிருந்தார்.
இதனால் கரீபியன் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில், ட்ரம்பின் கருத்துக்கு வெனிசுலா அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தங்கள் நாட்டின் வான்பரப்பை என்ன செய்ய வேண்டும் என்று சொல்வதற்கு அமெரிக்காவுக்கு எந்த உரிமையும் இல்லை எனவும் ட்ரம்பின் பேச்சு சர்வதேச சட்டத்திற்கு எதிரான அச்சுறுத்தல் மற்றும் நாட்டின் இறையாண்மை மீதான தாக்குதல் என்றும் வெனிசுலா அரசு தெரிவித்துள்ளது.
மேலும், அமெரிக்காவின் நடவடிக்கையை மற்ற நாடுகள் கண்டிக்க வேண்டும் எனவும் வெனிசுலா அரசு கேட்டுக்கொண்டுள்ளது.





















