இலங்கையின் மீட்பு பணிகளுக்கு முழு ஆதரவும் வழங்கப்படும் – ஜனாதிபதிக்கு பிரதமர் மோடி உறுதி
இலங்கை
டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து திங்கட்கிழமை (02) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை மக்களுக்கு தனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
இந்த உரையாடல் தொடர்பில் இந்தியப் பிரதமரின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
டித்வா புயலால் இலங்கையில் ஏற்பட்ட உயிர் இழப்பு மற்றும் பரவலான பேரழிவுக்கு பிரதமர் தனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
இந்தத் தேவைப்படும் நேரத்தில் இந்திய மக்கள் இலங்கை மக்களுடன் உறுதியான ஒற்றுமையுடனும் ஆதரவுடனும் நிற்பதாக அவர் தெரிவித்தார் – என்று கூறியுள்ளது.
இதன்போது, இந்தியாவின் உதவிக்கு தனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்ட ஜனாதிபதி அநுரகுமார, மீட்புக் குழுக்கள் மற்றும் நிவாரணப் பொருட்களை விரைவாக அனுப்பியதற்குப் பாரட்டுக்களையும் தெரிவித்தார்.
கடந்த வாரம் டித்வா சூறாவளி பல உயிரிழப்புகளையும், வீடுகள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு பெரும் சேதத்தையும், ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்ததையும் அடுத்து, இந்தியாவின் மீட்பு முயற்சிகளின் சரியான நேரத்தில் மற்றும் பயனுள்ள தன்மையை அவர் எடுத்துரைத்தார்.
நிவாரணம், மறுவாழ்வு மற்றும் மீள்கட்டமைப்பு பணிகளின் போது தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா தொடர்ந்து வழங்கும் என்றும் இந்தியப் பிரதமர் மோடி, ஜனாதிபதி அநுரகுமாரவிடம் இதன்போது உறுதியளித்தார்.
ஆப்ரேஷன் சாகர் பந்துவின் கீழ் செயல்படும் இந்தியா, அதன் தொலைநோக்குப் பார்வையான மஹாசாகருக்கு இணங்கவும், ‘முதல் பதிலளிப்பவர்’ என்ற நிலையை நிலைநிறுத்தியும், இலங்கை பொது சேவைகளை மீண்டும் தொடங்கவும் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவும் பாடுபடுவதால், அதன் ஆதரவைத் தொடரும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(MAHASAGAR என்பது இந்தியப் பெருங்கடல் பகுதியில் அனைவருக்குமான செயல் திறன் மிக்கப் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான கடல்சார் தலைமைகள் என்று பொருள்படும்)
இலங்கை மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் போது, நெருங்கிய தொடர்பில் இருக்க இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
இந்த விரைவான மனிதாபிமான நடவடிக்கைகள், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் வளர்ச்சி, வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை உள்ளடக்கிய இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துகிறது.
























