மோகினியில் நடிக்கும்போது எனது சொந்த வாழ்க்கையில் மிகப் பெரிய மாறுதல்
சினிமா
மோகினியில் நடிக்கும்போது எனது சொந்த வாழ்க்கையில் மிகப் பெரிய மாறுதல் ஏற்பட்டது. முதன் முதலாக ஓரளவுக்கு உலகம் தெரிந்த நிலையில் நான் ஒரு பெண்ணை மணந்துகொள்ளும் ஆசை ஏற்படக் காராணமாய் இருந்த படம் மோகினி.
ஆமாம். அப்போது அந்தப் படத்தில் என்னோடு நடித்த ஜானகிதான் அந்தப் பெண்! அதற்குப் பிறகுதான் நாங்கள் மணந்துகொள்ள முடிவு செய்யும் சூழ்நிலை உருவாகியது. எனது வாழ்க்கைத் துணைவியான திருமதி ஜானகி ராமச்சந்திரனை எனக்குத் தந்தது அந்த ‘மோகினி’தான்.’
இப்படிச் சொன்னவர் யார் தெடியுமா? எம்.ஜி.ஆர்.
ராஜமுக்தி, மோகினி, மருதநாட்டு இளவரசி, நாம் ஆகிய படங்களில் எம்.ஜி.ஆரும் வி.என்.ஜானகியும் நடித்துள்ளனர். எம்.ஜி.ஆர். மீது காதல் வசப்பட்டபோது ஜானகி முன்னணி நட்சத்திரம்! ‘மோகினி’ பட விளம்பரங்களிலும் டைட்டிலிலும் அவருக்கே முக்கியத்துவம் கிடைத்தது .
கலைஞர் எழுதிய ‘தேவகி’, ‘நாம்’ உள்ளிட்ட படங்களிலும் ஜானகி நடித்திருக்கிறார்.
‘மிருக ஜாதியில் புலி மானைக் கொல்கிறது. மனித ஜாதியில் மான் புலியைக் கொல்கிறது’ என்று ‘மருத நாட்டு இளவரசி’ படத்தில் எம்.ஜி.ஆர்.- வி.என். ஜானகி பேசிய மு.கருணாநிதியின் வசனம் இன்றைக்கும் பிரபலம்.
வி.என். ஜானகி நடித்து வெளிவந்த கடைசிப் படம் ‘நாம்’. 1953-ல் எம்.ஜி.ஆர்.- கலைஞர் கூட்டுத் தயாரிப்பில் உருவானது எம்.ஜி.ஆர்.-வி.என். ஜானகி பதிவுத் திருமணம் செய்துகொள்ள இயக்குநர் கே.சுப்ரமணியமே காரணம். அவரே சாட்சிக் கையெழுத்தும் போட்டார்.
தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். 1987-ல் மறைந்தபோது அவரைத் தொடர்ந்து பதவிக்கு வந்தவர் வி.என். ஜானகி. தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் என்கிற வரலாற்றுப் பெருமை ஜானகிக்கு உண்டு..
- தி இந்து






















