குச்சவெளி பிரதேச சபையின் தலைவரின் பிணை மனு நிராகரிப்பு
இலங்கை
500,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைதான குச்சவெளி பிரதேச சபையின் தலைவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அனியா பிள்ளை முபாரக் தாக்கல் செய்த பிணை மனுவை கொழும்பு நீதிவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
அதன்படி, சந்தேக நபரை எதிர்வரும் நவம்பர் 28 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதிவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டார்.
இருப்பினும், இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் தனிப்பட்ட சாரதியை தலா 1 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
மேலதிமகா சந்தேக நபர் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் பயணத் தடையையும் நீதிமன்றம் விதித்தது.
போர்க்காலத்தில் நாட்டை விட்டு வெளியேறி இலங்கைக்குத் திரும்பத் தயாராகி வந்த முல்லைத்தீவு, முள்ளியவளையைச் சேர்ந்த ஒருவருக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்காக ரூ. 500,000 இலஞ்சம் கோரி பெற்றதாகக் கூறப்படும் வழக்கில், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் முபாரக்கை கடந்த ஒக்டோபர் 31 அன்று கைது செய்தமையும் குறிப்பிடத்தக்கது.























