• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வாகன இறக்குமதி விதிமுறைகள் திருத்தம் - புதிய வர்த்தமானி வெளியீடு

இலங்கை

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை வெளியிடுவதற்கு பரிசோதனை உறுதிபடுத்தல் (Bureau Veritas) ஆய்வுச் சான்றிதழ்களை அனுமதித்தல் மற்றும் ஆவணங்களின் ஆன்லைன் அங்கீகாரத்தை அனுமதித்தல் உள்ளிட்ட முக்கிய இறக்குமதி மற்றும் ஏற்றுமதி விதிமுறைகளைத் திருத்தி சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

2025 மார்ச் 19 ஆம் திகதியிட்ட வர்த்தமானி அறிவிப்பை, நிதி அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வெளியிட்டுள்ளார்.

இலங்கை சுங்கத்திலிருந்து வாகனங்களை விடுவிப்பதில் வாகன இறக்குமதியாளர்களால் கூறப்படும் பல தடைகளைச் சுற்றியுள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்காக சிறப்பு வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இலங்கை சுங்கத்தில் சிக்கிய ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கிட்டத்தட்ட 400 வாகனங்களை விடுவிப்பதில் ஏற்பட்ட தாமதத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதிய வர்த்தமானியில் உள்ள திருத்தங்கள், அனைத்து நாடுகளிலிருந்தும் வாகன இறக்குமதிகளுக்கு Bureau Veritas ஆய்வுச் சான்றிதழ்கள் இப்போது ஏற்றுக்கொள்ளப்படும் என்று குறிப்பிடுகின்றன.

புதிய விதிமுறைகளின்படி, மோட்டார் வாகனங்களை விடுவிக்கும் முன், இலங்கை சுங்கத்துறை ஆவணங்களின் நம்பகத்தன்மையை ஆன்லைனில் சரிபார்க்க வேண்டும்.

உரிமம் பெற்ற வங்கிகளால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து ஆவணங்களும் ஆன்லைன் சரிபார்ப்பு மூலம் சான்றளிக்கப்படுவதை இலங்கை சுங்கம் உறுதி செய்ய வேண்டும் என்று வர்த்தமானி கூறுகிறது.

சமீபத்தில், இறக்குமதி விதிமுறைகள் குறித்த தவறான முடிவின் விளைவாக சுமார் 400 வாகனங்கள் இலங்கை சுங்கத்தில் 20 நாட்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் குற்றம் சாட்டினர்.

உற்பத்தி ஆண்டு அல்லது சரியான உற்பத்தி திகதியை குறிப்பிட வேண்டிய தேவை இணக்கத்தை கடினமாக்கியுள்ளது என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரெஞ்சிகே குறிப்பிட்டிருந்தார்.
 

Leave a Reply