சாவகச்சேரி நகர மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் - முன்னாள் அமைச்சர் டக்ளஸ் திறந்து வைத்தார்!
இலங்கை
இடைக்குறிப்பு:- தமிழர் அரசியலில் தற்போது தமிழ் மக்களுக்கு மாற்றீடு உள்ளது. தமிழரசுக் கட்சிக்கு இத்தனை ஆண்டுகள் வழங்கிய சந்தர்ப்பங்கள் போதுமானது. கடைசியாக சுமந்திரன் போன்றவர்கள் கட்சிக்குள் நுழைந்ததனால் ஏற்பட்ட 'பாதிப்புக்கள்' மற்றும் 'பின்னடைவுகள்' மிக அதிகம். அதுவும் அவரைத் தமிழரசுக் கட்சிக்குள் 'கள்ளத்தனமாக அனுப்பியதே ரணில் என்னும் நரிதான். அதற்கு அமரர் சம்பந்தன் அவர்களும் உடந்தையாக இருந்துள்ளார். ஆனாலும் தமிழரசுக் கட்சி கடந்த 60 வருடங்களுக்கு மேல் மக்களுக்கு சேவையாற்றுவது போன்று 'நடித்து' இலங்கையில் முதலாளித்துவ இனவாத அரசியல்வாதிகளுக்கு சார்பாகவே இயங்கிவந்தார்கள். அந்த நடைமுறை தான் இன்னும் இன்றும் தொடர்ந்து கொண்டுள்ளது.
இந்தச் செய்தி தொடர்பாக குறிப்பிடுவதானால், டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும் ஒரு வேண்டுகோள். உங்கள் அரசியல் பிரசன்னம் மற்றவர்களைப் போன்று வடக்கிலும் கிழக்கிலும் தொடரட்டும். ஆனால் உங்களுக்கு வெற்றி வாய்ப்புக்கள் கிட்டும் போது நீங்கள் அமைச்சர் பதவிகளை பெற்றுக்கொள்ளுவது அவசியம் இல்லை. ஏனென்றால் நீங்கள் அமைச்சர் பதவி போன்றவற்றை பெற்றுக்கொள்ளுவதற்கு யாரோடு கூட்டுச் சேருகின்றீர்கள் என்றால் எமது தமிழ் மக்களையும் சிங்கள மக்களையும் கொன்று குவித்த மகிந்த , கோட்டாபாய , ரணில் போன்ற 'இனப்படுகொலையாளர்களோடு' தான் என்பதை மறந்து விட்டே அவ்வாறு இணைகின்றீர்கள். அதை இனிமேல் செய்யாதீர்கள்
சாவகச்சேரி பேரூந்து நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தாங்கி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினால் திறந்து வைக்கப்பட்டது.
மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்கும் நோக்குடன் அமரர்களான பொன்னுபழநி, புவனேஸ்வரி தம்பதியினரின் ஞாபகார்த்தமாக அவரது உறவினர்களினால் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தாங்கியை திறந்து வைத்து உரையாற்றிய செயலாளர் நாயகம்,
"சுமார் 400 வருடங்களுக்கு முன்னர் சோழர் காலத்தில் அமைக்கப்பட்ட சிவன் கோயில் தீர்த்த கிணற்றில் இருந்து நீர் பெற்றுக் கொள்ளப்பட்டு சுத்திகரிக்கப்படும் குடிநீரையும், அதற்கான கட்டமைப்புக்களையும் பாதுகாத்து பயன்படுத்த வேண்டியது சாவகச்சேரி மக்களின் கடப்பாடு.
மேலும், இந்த விடயத்தினை எனது கவனத்திற்கு கொண்டு வந்ததுடன் தொடர்ச்சியாக எனக்கு நினைவுபடுத்திய விடயத்தை முன்னகர்த்திய தோழர்களான மெடிஸ்கோ, தர்சன் ஆகியோருக்கும் தொல்லியல் திணைக்கள அதிகாரகள், மற்றும் நீர்தாங்கியை அமைத்திருக்கும் குடும்பத்தினர் ஆகியோருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் " எனத் தெரிவித்தார்.
கடந்த வருடம் முன்னெடுக்கப்பட்ட இந்த திட்டத்திற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க குறித்த கிணற்றின் நீரை பயன்படுத்துவதற்கு தொல்லியல் திணைக்களம் அனுமதி வழங்காத நிலையில் அப்போது அமைச்சராக இருந்த தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலையிட்டு, அனுமதியை பெற்றுக் கொடுத்ததுடன் நீர்தாங்கிக்கான அடிக்கல்லினையும் நாட்டி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தென்மாராட்சி பிரதேச அமைப்பாளர் மெடிஸ்கோ, உதவி அமைப்பாளர் தர்ஷன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.






















