ஏமனின் ஹவுதிகளை எதிர்த்து அமெரிக்கா கொடூர தாக்குதல் - குழந்தைகள் உள்பட 20 பேர் உயிரிழப்பு
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு, ஏமனில் உள்ள ஹவுதிகளுக்கு எதிராக நடத்திய முதல் தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர் என்று கிளர்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
ஹவுதி அமைப்புக்கு வழங்கி வரும் ஆதரவை நிறுத்துமாறு ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்த நிலையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. முன்னதாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போரின் போது, ஹவுதி அமைப்பினர் இஸ்ரேல் மற்றும் செங்கடல் கடலோர பகுதிகளில் தாக்குதல் நடத்தி வந்தது.
இஸ்ரேலுக்கு எதிரான செயல்களை கண்டித்து அமெரிக்கா நடத்திய இந்த தாக்குதலில் உயிரிழந்த 20 பேரில் குழந்தைகளும் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து ஏ.எஃப்.பி. புகைப்பட கலைஞர் வெளியிட்ட தகவல்களில் ஏமனின் தலைநகர் சனாவில் மூன்றுமுறை அதிபயங்கர வெடி சத்தம் கேட்டதாகவும், குடியிருப்பு பகுதிகளில் கரும்புகைகள் வெளியேறியதாகவும் தெரிவித்தார்.
இதேபோல் ஏமனின் வடக்கு பகுதியான சதா பகுதியிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் மத்திய கமாண்ட் வெளியிட்ட பதிவுகளில், விமானத்தில் வீரர்கள் ஏறுவதும், வான்வெளியில் இருந்து அவர்கள் நடத்திய தாக்குதலில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுவது தொடர்பான புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.























