• Welcome to TamilsGuide
செய்திகள் 1

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 8 வருடங்கள் பூர்த்தி

இலங்கை

வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வெளிப்படுத்துமாறு கோரி முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 8 வருடங்கள் பூர்த்தியடையும் நிலையில், அதனை முன்னிட்டு இன்று வட்டுவாகலில் விசேட கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இறுதிக்கட்டப்போரின்போது வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வெளிப்படுத்துமாறும், நீதியை நிலைநாட்டுமாறும் கோரி முல்லைத்தீவு மாவட்ட உறவுகளால் தொடர் கவனயீர்ப்புப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதியுடன் எட்டு வருடங்கள், அதாவது 2923 நாட்கள் பூர்த்தியடைகின்றன.

ஆனால் அக்கோரிக்கை இன்னமும் ஈடேறாத நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தைச்சேர்ந்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் 8 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு முல்லைத்தீவு, வட்டுவாகலில் விசேட கவனயீர்ப்புப்போராட்டமொன்று ஆரம்பமாகியது.

‘தாய்மார்களாக, பெற்றோராக, குடும்பமாக எமது உறவுகளைக் கண்டுபிடிக்க நீதிக்கான இந்த நீண்ட போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கிறோம்’ என வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு இன்றைய கவனயீர்ப்புப்போராட்டத்தை ‘போரின் இறுதி நாட்களில் வட்டுவாகல் பகுதியில் இலங்கை இராணுவத்திடம் ஒப்படைத்த எங்கள் உறவுகள் என்னவானார்கள்?’ எனும் பிரதான கேள்வியுடன் முன்னெடுக்கவிருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இப்போராட்டத்தில் சகல தரப்பினரும் கலந்துகொண்டு தமக்கு ஆதரவு வழங்கவேண்டும் எனவும், வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கான நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தவேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.
 

Leave a Reply