• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஞானசார தேரரை பிணையில் விடுவிக்க உத்தரவு

இலங்கை

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு, மேல் நீதிமன்றம் இன்று (25) உத்தரவிட்டது.

இஸ்லாம் மதத்திற்கு எதிரான அவதூறான கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டின் கீழ் 9 மாத சிறைத்தண்டனை உத்தரவினை அவர் எதிர்கொண்டுள்ளார்.

இந்த தண்டனைக்கு எதிராக ஞானசார தேரரின் சட்டத்தரணிகள் தாக்கல் செய்திருந்த மனுவை பரிசீலித்து, வழக்கு தொடர்பான மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை, இறுதித் தீர்ப்பு அறிவிக்கும் வரை குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு பிணை வழங்குமாறு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கடந்த ஜனவரி 09 அன்று, கொழும்பு, நீதிவான் நீதிமன்றம் அவருக்கு எதிராக ஒன்பது மாத சிறைத்தண்டனை உத்தரவை பிறப்பித்தது.

தீர்ப்பை அறிவித்த கொழும்பு மேலதிக நீதிவான் பசன் அமரசேன, பிரதிவாதிக்கு 1500 ரூபா அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

கலகொட அத்தே ஞானசார தேரர் 2016 ஜூலை 16 ஆம் திகதி கொழும்பு, கிருலப்பனை பிரதேசத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ​​“இஸ்லாம் ஒரு புற்றுநோய்.. அதனை ஒழிக்க வேண்டும்” என குறிப்பிட்டு இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலான கருத்தை வெளியிட்டமைக்காக அவருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply