• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எதிர் கட்சிக்கும் – சீன அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

இலங்கை

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய மக்கள் கூட்டணி, இலங்கை வந்துள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழு உறுப்பினர் துணை அமைச்சர் சன் ஹையான் குழுவினரை சந்தித்துள்ளனர்.

குறித்த சந்திப்பு எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

இரு தரப்பினருக்கும் இடையிலான இந்த தனித்துவமான கலந்துரையாடல் ஒரு மணித்தியாலத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டதுடன், இக்கலந்துரையாடலுக்கு மேலதிகமாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பிரதியமைச்சருக்கும் இடையில் 45 நிமிட நேருக்குநேர் கலந்துரையாடலும் இடம்பெற்றது.

பொருளாதாரம், வர்த்தகம், மற்றும் அரசியல் உறவுகள் என பல விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், அதற்கமைவாக இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் வர்த்தக உறவுகளை கட்டியெழுப்புவது தொடர்பில் இரு தரப்பினரும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு குறித்து சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச உறவுகள் துறை தலைவர்கள் கூறியுள்ள நிலையில், சீனாவின் பொருளாதார வளர்ச்சி மாதிரியை மாற்றி, தற்போதைய சூழ்நிலையில் இருந்து நம் நாட்டை மீட்டெடுக்கும் முறை குறித்தும் இரு தரப்பும் கருத்துகளை பரிமாறிக்கொண்டன.

சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் குறித்த தரப்பிடம் எடுத்துரைத்துள்ளார்.

அத்துடன், இந்த ஆண்டு தேர்தல் ஆண்டாக இருப்பதால் அதன் முக்கியத்துவத்தை தெரிவித்ததுடன், மக்கள் எதிர்பார்க்கும் ஜனரஞ்சக அரசாங்கத்தை கட்டியெழுப்ப தானும் ,தனது கட்சியும் தயாராக இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அதன் சர்வதேசத் துறையின் மத்தியக் குழுவின் துணை அமைச்சர் திருமதி சன் ஹையன், சீனத் தூதர் கியூ சென்ஹாங், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச உறவுகள் துறையின் துணை இயக்குநர் ஜெனரல் லின் தாவோ, இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் சென் சியாங்யுவான், சீன கம்யூனிஸ்ட் கட்சி சர்வதேசிய லி ஜின்யான், இணைப்புத் துறையின் இயக்குநர் திருமதி வென் ஜுன், துணை இயக்குநர் திருமதி ஜின் யான், தூதரகத்தின் மூன்றாவது செயலர் ஜின் என்ஸே மற்றும் ஜாங். குயு, மொழி பெயர்ப்பாளர் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

மேலும், ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கலாநிதி ஹர்ஷ டி சில்வா, எரான் விக்கிரமரத்ன, பேராசிரியர் ஜி. அல். பீரிஸ், மனோ கணேசன், பழனி திகாம்பரம், ஹர்ஷன ராஜகருணா, நளின் பண்டார ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply