• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இஸ்ரேல் மீது ஏவுகணைகள் வீசி ஈரான் தாக்குதல் - ஐ.நா. அவசர ஆலோசனை

சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் கடந்த வாரம் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் 2 ராணுவ தளபதிகள் உள்பட 9 பேர் பலியானார்கள். இதனால் கடும் ஆத்திரமடைந்துள்ள ஈரான், தக்க பதிலடி கொடுப்போம் என்று சூளுரைத்துள்ளது.

இதனால் இஸ்ரேல் மீது ஈரான் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்று தகவல் வெளியானது. மேலும், இவ்விவகாரத்தில் ஒதுங்கி இருக்குமாறு அமெரிக்காவிடம் ஈரான் தெரிவித்தது. இதற்கிடையே இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் முழுவீச்சில் தயாராகி வருகிறது. இதையடுத்து இஸ்ரேல் ராணுவம் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தங்கள் நாட்டை நோக்கி ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய முதல் நேரடி தாக்குதலாக இது கருதப்படுகிறது. 100-க்கும் மேற்பட்ட டிரோன்கள் ஈரானில் இருந்து ஏவப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. தங்கள் நாட்டிற்கு மேலே அடுக்கடுக்காக டிரோன்கள் பறந்ததாக ஈராக் மற்றும் ஜோர்டானும் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், இஸ்ரேல்- ஈரான் இடையே போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது குறித்து ஆலோசனை நடத்த ஐக்கிய நாடுகள் சபை அவசர கூட்டத்தை கூட்டியுள்ளது.

இஸ்ரேல், ஈரான் இடையே போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

Leave a Reply