• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காலத்தால் அழிக்க முடியாத வியப்பின் சரித்திர குறியீடாக நாயகன் திரைப்படம்

சினிமா

கமல்ஹாசன் ஒரு ஆகச் சிறந்த கலைஞர் என அனைவரும் அறிந்திருப்பீர்கள். நல்ல நடிகனாக இன்று வரை கமல்ஹாசன் சினிமாவில் பலம் வந்து கொண்டிருக்கிறார். என்னதான் நல்ல நடிகனாக இருந்தாலும் தன்னுடைய முழுமையான திறமையை வெளிப்படுத்த ஒரு நல்ல கதை வேண்டும்.

அப்படி நல்ல கதை அமைந்தால் அந்த கதையை சரியாக மக்கள் மத்தியில் வெளிப்படுத்த ஒரு நல்ல இயக்குனர் வேண்டும். ஒன்றுக்கு ஒன்று சளைத்தது கிடையாது என கூறும் அளவிற்கு கமல்ஹாசன், மணிரத்னம் இவர்கள் இருவரும் இணைந்த திரைப்படம் தான் நாயகன்.

முழுமையான திறமைகளை கொடுப்பதில் இருவரும் வல்லவர்கள். இவர்கள் இருவரும் இணைந்த மிகப்பெரிய சகாப்தமாக வெளியாகி உலகம் முழுவதும் பேசப்பட்ட திரைப்படம் தான் இந்த நாயகன் திரைப்படம்.

பல இயக்குனர்களை உருவாக்கி பாடப் புத்தகமாக இன்று வரை பல இளம் இயக்குனர்களுக்கு இருந்து வருகிறது என்று கூறினால் அது மிகையாகாது. அந்த அளவிற்கு திரைக்கதையில் ஒரு தெளிவு நடிப்பில் ஒரு முழுமை என அனைத்து கூறுகளும் சிறப்பாக அமைந்திருக்கும்.

இந்த திரைப்படத்தில் மிகப்பெரிய பலம் என்று கூறினால் அது இளையராஜா. சொல்லவே தேவையில்லை கமல்ஹாசன் மணிரத்தினம் இளையராஜா இந்த மூன்று கிரகமும் இணைந்தால் என்ன நிகழும் என தமிழ் ரசிகர்களுக்கு கட்டாயம் தெரியும் அது ஒரு தரமான சம்பவம் இன்று.

மூன்று பரிமாணங்களில் நடித்து மூன்றுக்கும் வெவ்வேறு பாவனைகளை கொடுத்து, குரலை வெளிப்படுத்தி, உடல் மொழியை மாற்றி சிறப்பாக நடித்திருப்பார் கமல்ஹாசன். ஒவ்வொரு காட்சிகளும் ஒவ்வொரு கதையை கூறும் அந்த அளவிற்கு திரை கதையை ரசிகர்கள் மத்தியில் ஆழமாக பதிய வைத்திருப்பார் மணிரத்னம்.

மும்பையில் தாதாவாக இருந்த வரதராஜன் முதலியார் என்பவரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான் இந்த நாயகன். குழந்தை, இளமை, முதுமை என மூன்று பரிமாணங்களையும் சிறப்பாக நடித்து தனது உடல் மொழியிலேயே மொத்த ரசிகர்களையும் தன்வசம் ஆக்கினார்.

ஒவ்வொரு முறையும் இந்த திரைப்படத்தை பார்க்கும் பொழுதும் ஒவ்வொரு அனுபவம் கிடைப்பதாக பல முன்னணி இயக்குனர்கள் தாங்கள் அளிக்கும் பேட்டியில் கூறியுள்ளனர். ஒவ்வொரு முறையும் பல பாடங்களையும் இந்த திரைப்படத்தின் மூலம் நாங்கள் கற்று வருகிறோம் அவர்கள் கூறுவது உண்டு.

இந்த திரைப்படம் 1987 ஆம் ஆண்டு தீபாவளி தினத்தன்று வெளியானது அதாவது இன்று வெளியானது. இந்த திரைப்படத்தில் மொத்த பாடல்களையும் புலமைப்பித்தன் எழுதி இருந்தார். ஆனால் ஒரே ஒரு பாடலை மட்டும் இளையராஜா எழுதினார். அதுதான் தமிழ்நாடு எங்கும் உலா வந்த, நிலா அது வானத்து மேலே என்ற பாடல்.

1988 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டது. உலகத்தில் இருக்கக்கூடிய 100 சிறந்த திரைப்படங்களில் இந்த திரைப்படமும் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த திரைப்படம் மூன்று தேசிய விருதுகளை தன் வசமாக்கியது. பல்வேறு சிறப்பு விருதுகளையும் பெற்றது.

செய்த வினை ஒருவரை சுற்றி வரும் என்று கூறுவதற்கு இந்த திரைப்படம் ஒரு மிகப்பெரிய உதாரணமாகும். எங்கு இந்த கதை தொடங்கியதோ அதே இடத்தில் தான் முடியும் என்பதை சிறப்பாக மணிரத்னம் தனது கதையின் மூலம் அழகாக எடுத்துரைத்திருப்பார்.

தமிழ் மட்டுமல்லாது மலையாளம் கன்னடம் தெலுங்கு ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு இந்த திரைப்படம் வெளியானது. இன்று வரை சினிமாவை தேடிச் செல்லும் இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக ஒரு மிகப்பெரிய பாடப் புத்தகமாக விளங்கி வரும் இந்தத் திரைப்படம். காலத்தால் அழிக்க முடியாத வியப்பின் சரித்திர குறியீடாக இன்று வரை நாயகன் வாழ்ந்து வருகிறது என்று கூறினால் அது மிகையாகாது.

தேன்மொழி

Leave a Reply