• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜெமினி பிக்சர்ஸ் வாசன் அலுவலகத்திற்கு நடிகர் திலகம் எத்தனையோ முறை படையெடுத்தார். 

சினிமா

ஜெமினி பிக்சர்ஸ் வாசன் அலுவலகத்திற்கு நடிகர் திலகம் எத்தனையோ முறை படையெடுத்தார். ‘’உனக்கெல்லாம் சினிமா செட்டாகாது தம்பி..பிழைப்புக்கு வேறு தொழிலை பார்த்துக்கொள் தம்பி ’’ என்று கடைசியில் வாசனால் நிராகரிக்கப்பட்டார் சிவாஜி..திரையுலகில் கரைகண்டு நுரைதள்ளிய ஜாம்பவான் வாசனுக்கு தெரியாத சிவாஜியின் சிறப்பம்சம், சாதாரண படத்தயாரிப்பாளர் வேலூர் நேஷனல் தியேட்டர் உரிமையாளர் பீ.ஏ,பெருமாளுக்கு தெரிந்ததுதான் விநோதம்.
இதே வாசன், பின்னாளில் சிவாஜியைநாடி இரும்புத்திரை, மோட்டார் சுந்தரம் பிள்ளை போன்ற காவியங்களை எடுத்து வெற்றிபெற்றது தனிக்கதை.
பாடல்களே இல்லாத முதல் தமிழ்படமான அந்த நாள் (1954) படத்தில் அப்படியொரு கொடூரமான தேசத்துரோகி வேடம்.. மனைவி பண்டரிபாய் கையாலேயே சுட்டுக் கொல்லப்பட்டு சாகடிக்கப்படுவார்
படம் ஆரம்பித்த முதல் பிரேமிலேயே கதாநாயகன் செத்துக்கிடக்கவேண்டும். எந்த கதாநாயகன் இப்படி நடிக்க ஒப்புக்கொள்வான்? ஆனா சிவாஜி என்ற கலைஞன் ஒப்புக்கொண்டு துவம்சம் செய்தார்..
         காஞ்சிபுரத்தில் உள்ள திரையரங்குகளில் 1970-களில் வசந்தமாளிகை, எங்கள் தங்க ராஜா தங்கப்பதக்கம் உத்தமன் என பாடல்களுக்காக திருப்பி திருப்பி பார்த்த படங்கள் அப்போதே ஏராளம்..
பின்னாளில் வளர்ந்தபிறகு ரசிகர்களுடன் விவாதத்தில் இறங்கும்போது, நடிகர் திலகத்தைப் பற்றி யாருக்கு தகவல்கள் அதிகமாக தெரியும் என்று முட்டி மோதுவோம்.
சிவாஜி நடித்த திரைப்படங்கள் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் போது முதல் நாள் இரவு சென்று சிவாஜி ரசிகர்களுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு தியேட்டரில் கமெண்டுகளை தெறிக்க விடுவோம்.
எந்தெந்த காட்சியில் சிவாஜி க்ளோசப்பில் வந்து பிரமாண்டமான திரையை ஆக்கிரமிக்கும் போது கைதட்டல்கள் தியேட்டரை அதிர செய்யும் என்பதெல்லாம் எங்களுக்கு அத்துபடி.
"வேணும்னா யாரா இருந்தாலும் விடக்கூடாது. வேண்டாம்னா விலைமாதா இருந்தாலும் தொடக்கூடாது""
"எனக்கு தெரியும். உங்க அக்கா வரமாட்டா.. அவகிட்ட பிடிச்சதே அந்த அகம்பாவம் தான்"
வசந்த மாளிகையில் இந்த வசனங்கள் வரும் முன்னரே தியேட்டர் உள்ளே அதகளப்படும் சிவாஜியை நினைக்க நினைக்க எத்தனை எத்தனையோ விஷயங்கள் வந்து மோதுகின்றன.
சில படங்களில் நீண்ட நேரம் பேசிய வசனங்களை வைத்தும் ஸ்டைல், ரொமான்டிக், அழுகை போன்றவற்றிற்காகவும் பலரும் நடிகர் திலகத்தை சிலாகித்துப் பேசுவார்கள் .
அதையெல்லாம் விட நமக்கு பிடித்த சிவாஜி, சில வினாடிகளில் ஓரிரு வார்த்தைகளில் துவம்சம் செய்யும் காட்சிகள்தான்.
குலமகள் ராதை படத்தில் சரோஜாதேவி காதலில் தன்னை ஏமாற்றி விட்டதாக உன்னைச் சொல்லிக் குற்றமில்லை என்னை சொல்லி குற்றமில்லை காலம் செய்த கோலமடி என அழுது பாடிவிட்டு, விரக்தியில் இருக்கும் சிவாஜியிடம் எதேச்சையாக உதவும் தேவிகா கேட்பார் ,பெண்கள் என்றால் உங்களுக்கு பிடிக்கவே பிடிக்காதா?
"இல்லை..பயமா இருக்கு" இதை சலிப்புடன் சொல்லும் நடிகர் திலகம் சொல்லும் விதம்.. ஒரு வேளை என்ற சமூக வலைத்தளங்கள் அன்று இருந்திருந்தால் சிவாஜி ஒரு வரி டயலாக்குகள் மீம்ஸ் ஆக மாறியிருக்கும் .
இப்படி படத்துக்குப்படம் ஓரிரு வார்த்தைகளாலேயே சிவாஜி நின்று விளையாடிய விதம் பிரமிப்பாக இருக்கும்.. அதை கூர்ந்து பார்த்தால் தான் அந்த அற்புத தருணத்தை அனுபவிக்கவே முடியும்.
தலைமுறைகளை தாண்டி கடந்து இன்றும் வீச்சு பெற்றிருக்கின்ற அளவுக்கு திறமை வாய்க்கப் பெற்றவர் சிவாஜி.
பிறவிக்கலைஞன் என்பார்களே, அது அரிதினும் அரிதாகவே அமையும்.. 
1928-ம் ஆண்டு பிறந்த நடிகர் திலகத்தின் கதையும் இதே ரகம்தான்.,1946 ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா எழுதிய நாடகத்தில் நடிப்பதை கடைசி நேரத்தில் எம்ஜிஆர் தவிர்த்துவிட்டார்.
காங்கிரஸ் அபிமானியாக இருந்த எம்ஜிஆர், திராவிட வாடைக்குள் சிக்கி விடக்கூடாது என அண்ணன் எம் ஜி சக்கரபாணிதான் இந்த தவிர்ப்பை செய்யச் சொன்னார் என சொல்வார்கள்..

நாடக அரங்கேற்றதிற்கு மூன்றே நாட்கள்தான் இடையில் இருந்தன. பதறிப்போன அண்ணாவின் கண்ணுக்கு அப்போது ஏதோ ஒரு ஒளி தென்பட்டது.. அது, ஒத்தை நாடியாய் வசன ஒத்திகைக்கு வந்த கணேசன் என்ற 18 வயது இளைஞன்.
90 பக்க வசனத்தை அவரிடம் கொடுத்து ‘’நீதான் மாவீரன் சிவாஜியாய் நடிக்கிறாய்’’ என்று சொன்னார். கணேசன் தயங்கவேயில்லை.. வசனங்களை மனதில் ஏற்ற ஆரம்பித்தார். இன்னாரு பக்கம் 29 வயது எம்ஜிஆருக்காக தைக்கப்பட்டிருந்த ஆடைகள் 18 வயசு கணேசனுக்காக சுருக்கி மாற்றி தைக்கப்பட்டுவந்தன.
நாடகம் அரங்கேறியது.. மராட்டிய வீரனாக கர்ஜித்த கணேசன், நாடகத்தை பார்க்கவந்த தந்தை பெரியாரின் கண்ணுக்கு சிவாஜியாகவே தெரிந்தார்..பெரியாரின் வாயால் கணேசன், அன்றைய தினமே சிவாஜி கணேசனாக மாறிப்போனார்.
ஆனாலும் எதிர்மறை விதி அவரை துரத்திக்கொண்டே இருந்தது.. 1948ல் வெளியான சந்திரலேகா படம் , பிரமாண்டமாக வளர்ந்துவந்த நேரம்..
 பீஏ பெருமாளை போலவே இன்னொரு கில்லாடிக்கும் தெரிந்தது.
அதுவேறுயாருமல்ல, நடிகை அஞ்சலிதேவிதான். உணமையில் சிவாஜி கதாநாயகனாய் சம்பளத்துடன் புக்கான முதல் படம், அஞ்சலிதேவி தயாரித்த பரதேசி படம்தான்..
1951ல் நிரபராதி என்றொரு படம்… முக்காமாலா கிருஷ்ணமூர்த்தி ஹீராவாக நடித்து தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில் வெளியான படம்.. நடிகர் முக்காமாலா எம்ஜிஆரின் நம் நாடு படத்தில் கிளைமாக்சில் போலீஸ் அதிகாரியாக வருவார்.
நிரபராதி படத்தின் தமிழ் வெர்ஷனில் முக்காமலாவால் தமிழைசரியாக உச்சரிக்க முடியவில்லை..இதற்காக டப்பிங் பேசும்வாய்ப்பு சிவாஜிக்கு கிடைத்தது. சம்பளம் 500 ரூபாய்..அப்போது சிவாஜியின் வசன ஆற்றலை பார்த்துதான் நிரபராதி படத்தின் நாயகியான அஞ்சலிதேவி தன்னுடைய சொந்த படத்திற்கு சிவாஜியை கதாநாயகனாக புக் செய்தார்.
ஆனால் அஞ்சலிதேவியின் பரதேசி படம் தயாராவதற்குள் பி.ஏ-பெருமாளும் ஏவிஎம்மும் கூட்டாக தயாரித்த பராசக்தி வேகமாக வளர்ந்து 1952ல் வெளியாகி சக்கை போடுபோட்டு வெள்ளி விழாவே கண்டுவிட்டது..
பராசக்தியின் இமாலய வெற்றிக்களிப்பில் சிவாஜி மிதக்கவேயில்லை.. இப்படிப்பட்ட ரோல்கள்தான் வேண்டும் என்று அடம்பிடிக்கவில்லை..
எந்த பாத்திரம் என்றாலும் தயார் என்று ஓப்பனாய் சொன்ன சிவாஜி, பெரும்பாலும் இமேஜ் பார்த்ததே யில்லை.. பராசக்தி ஹீரோவாய் மிரட்டிய அவர், அடுத்த சில படங்களில் வில்லத்தன கதாநாயகனாய் தாராளமாக நடித்துத்தள்ள முடிந்தது..
திரும்பிப்பார்   சிவாஜியை பார்த்து அக்கா பண்டரிபாயே பேசுவார்.
பராசக்தி குணசேகரனுக்கும் அடுத்த ஆண்டு வந்த திரும்பிப்பார் பரமானந்தத்திற்கும் இடையேதான் நடிப்பில் எவ்வளவு வேறுபாடு..
இங்கே ஒரு வியப்பான ஒரு விஷயத்தை சொல்லியாக வேண்டும் சிவாஜி முதன்முதலாய் கதாநாயகனாக புக் செய்யப்பட்ட நிரபராதி படத்தில் சிவாஜிக்கு தாய் பண்டரிபாய். அடுத்த படமான பராசக்தியில் காதலியாக பண்டரிபாய்.. இரண்டு படங்கள் தள்ளி வந்த திரும்பிப்பார் படத்தில் சிவாஜியின் அக்காவாக பண்டரிபாய்..
படம் முழுக்க மிரட்டி எடுத்தார் சிவாஜி..
இந்த இடத்தில் ஒரு விஷயத்தை குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டும்.
அமெரிக்கா அரசால் கௌரவிக்கப்பட்டு தாயகம் திரும்பிய நடிகர் திலகத்தை மக்கள் திலகம் வாழ்த்தி 1962 நடிகன் குரல் பத்திரிகையில் புகழ்ந்து தள்ளி எழுதினார் . அந்தக் கட்டுரையின் சில அம்சங்களைக் கீழே பார்ப்போம்.
''நல்ல குணங்கள் உள்ள பாத்திரங்களில் நடித்து, மக்கள் மனதில் இடம் பெறுவது எளிது என்று கூறப்படலாம்.
ஆனால், மக்களால் வெறுக்கப்படும் பாத்திரத்தைத் தாங்கி, மக்கள் இதயத்தில் இடம் பெறுவது என்பது சாதாரண விஷயமல்ல என்பதை நாம் அறிய வேண்டும்.
நடிப்பு என்பது என்ன? கற்பனை தானே! ஏதோ ஒன்றிலி ருந்து பிறந்து அல்லது பிரிந்து அதிகமாவதுதான் கற்பனை.
நடிகராயினும், எழுத்தாளராயினும் புதிதாக ஒன்றைப் படைப்பவர்கள் எல்லோருமே காண்பன வற்றை ஊடுருவி நோக்கும் நுண்புலனும், காணாத வற்றைத் தோற்றுவிக்கும் செயல் திறனும் பெற்றி ருப்பது இயற்கை. ஆதலால், “இது அந்தப் பாணி, இந்தப் பாணி என்று மேலெழுந்தவாரியாக விமர்சிப்பது தவறாகும்.
அமெரிக்க அரசாங்க விருந்தினராக அழைக்கப்பட்டுச் சென்று, வெற்றியுடன் திரும்பிய தம்பி கணேசனுக்கு நடிகர் சங்கம் மாபெரும் ஊர்வலம் நடத்தி வரவேற்பும், பாராட்டும் வழங்கியதைக் கண்டு. “அது ஏன்?” என்று கேள்வி கேட்டவர்களும் இருக்கிறார்கள் என்பதை அறியும்போது என்னால் வேதனைப்படாமல் இருக்கமுடியவில்லை.
இந்தியத் துணைக் கண்டத்திலேயே சிறந்த நடிகர் என்று பாராட்டப்படும் “சிவாஜி கணேசன் யார்?” என்ற கேள்வி பிறக்கும்போது, “அவர் நாடு தமிழ்நாடு, அவருடைய தாய்மொழி தமிழ்; அவரது பண்பாடு தமிழ்ப்பண்பாடு!” என்ற பதில்தான் கிடைக்கும். அதைவிட வேறொரு தகுதி வேண்டுமா, அவரை ஒருமுகமாக எல்லோரும் பாராட்டுவதற்கு..
- 59 ஆண்டுகளுக்கு முன்பே இப்படி தன்னால் முடிந்த அளவுக்கு நடிகர் திலகத்திற்கு பெருமை சேர்த்தார்.

Devakottai Dolphin AR Ramanathan
 

Leave a Reply