• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மாஸ் வசனங்களின் நாயகன் சக்தி கிருஷ்ணசாமி..

சினிமா

வானம் பொழிகிறது.. எங்களோடு வயலுக்கு வந்தாயா?.. யாரைக் கேட்கிறாய் வரி?.. மாஸ் வசனங்களின் நாயகன் சக்தி கிருஷ்ணசாமி..

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எத்தனையோ புராணப் படங்களில் நடித்தாலும், தேசத் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றுப் படங்களில் நடித்தாலும் என்றும் சட்டென ஞாபகத்திற்கு வருவது வீரபாண்டியக் கட்டபொம்மன் படத்தில் வரும் அந்த வசனம் தான்.

“எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்றமிறைத்தாயா? நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா? நாற்று நட்டாயா? களை பறித்தாயா? கழனிவாழ் உழவருக்கு கஞ்சிக் கலயம் சுமந்தாயா? அல்லது அங்கு கொஞ்சி விளையாடும் எம்குலப் பெண்களுக்கு மஞ்சளரைத்துப் பணிபுரிந்தாயா? அல்லது நீ மாமனா? மச்சானா? மானங்கெட்டவனே! எதற்குக் கேட்கிறாய் திறை, யாரைக் கேட்கிறாய் வரி? போரடித்து நெற்குவிக்கும் மேழிநாட்டு உழவர் கூட்டம், பரங்கியரின் உடலையும் போரடித்து, தலைகளை நேர்க்கதிர்களாய் குவித்துவிடும் ஜாக்கிரதை” என்ற வசனத்தை இன்றளவும் உச்சரித்துக் கொண்டிருக்கிறோம்.

இது போன்ற பல உணர்ச்சிமிகு தேசபக்தி வசனங்களை அந்தக் கால சினிமாக்களில் எழுதி நாடி நரம்பு புடைக்க வைத்த வசனகார்த்தா தான் சக்தி கிருஷ்ணசாமி. 1950-களில் தொடங்கி 1970வரை நிறைய படங்களுக்கு வசனம் எழுதி தமிழ் சினிமாவின் சிறந்த கதையாசிரியர்களில் ஒருவராகப் போற்றப்பட்டார்.

சக்தி நாடக சபா குழுவில் இருந்து வந்தமையால் இவருக்கு சக்தி கிருஷ்சாமி என்ற பெயர் ஒட்டிக் கொண்டது. கிருஷ்ணசாமி 1957ல் வெள்ளையர்களை எதிர்த்து வீரமரணம் எய்திய வீரபாண்டிய கட்டபொம்மனின் வாழ்க்கை வரலாற்றை நாடகமாக எழுதினார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கட்டபொம்மனாக நடித்த இந்த நாடகம் வெற்றி அடைந்தது. இதனைத் தொடர்ந்து அதனைத் திரைப்படமாக எடுக்க முடிவு செய்யப்பட்டது. சிலம்புச் செல்வர் ம. பொ. சிவஞானத்தின் ஆய்வின் அடிப்படையில் கிருஷ்ணசாமியே அதற்கும் கதை வசனம் எழுதினார்.

தேசப் பற்றை வளர்க்கும் அவரது அனல் பறக்கும் வசனங்கள் அப்படத்தின் வெற்றியில் பெரும் பங்கு வகித்தன. படத்தின் கதை-வசனம் தனியே புத்தகமாகவும், ஒலி நாடாவாகவும் விற்பனையாகுமளவுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று இன்றும் டிரெண்டிங்கில் உள்ளது. வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜியின் பல படங்களுக்கு வசனகார்த்தாவாகப் பணியாற்றினார் சக்தி. கிருஷ்ணசாமி. மேலும் பல நாடகங்களின் ஆசிரியராகத் திகழ்ந்ததால் சிவாஜி கணேசன் இவரைக் குரு என அழைப்பார்.
 

Leave a Reply