• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மியான்மரில் கட்டாய ராணுவ சேவை சட்டம்

மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜனநாயக அரசை கவிழ்த்து விட்டு ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது. ராணுவ ஆட்சிக்கு எதிராக போராளி குழுக்கள் சண்டையிட்டு வருகிறார்கள். இதில் சில பகுதிகளை போராளி குழுக்கள் கைப்பற்றியது. மேலும் தாக்குதலில் வீரர்களும் உயிரிழந்தனர்.

போராளி குழுக்களுடன் மோதலில் மியான்மர் ராணுவம் பின்னடைவை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் மியான்மரில் முதல் முறையாக ராணுவ சேவை சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதன் மூலம் இளைஞர்கள், பெண்கள் குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும்.

முந்தைய ராணுவ அரசாங்கத்தின் கீழ் நிறைவேற்றப்பட்ட 2010 மக்கள் ராணுவ சேவைச் சட்டத்தின் கீழ், 18 முதல் 45 வயதுக்குட்பட்ட ஆண்களும், 18 முதல் 35 வயதுக்குட்பட்ட பெண்களும் இரண்டு ஆண்டுகளுக்கு ஆயுதப் படைகளில் சேர்க்கப்படலாம். தேசிய அவசர காலங்களில் ஐந்து ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம்.

இதுகுறித்து ராணுவ அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஜாவ் மின் துன் கூறும்போது: "மியான்மரின் தற்போதைய சூழ்நிலை காரணமாக இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. சட்டத்தை செயல்படுத்துவது எதிரிகளுக்கு வலிமையைக் காட்டுவதன் மூலம் போரைத் தடுக்க உதவும்.

தேசப் பாதுகாப்பு என்பது சிப்பாயின் பொறுப்பு மட்டுமல்ல. இது நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள அனைத்து மக்களின் பொறுப்பாகும். தேசிய பாதுகாப்பு என்பது அனைவரின் பொறுப்பு. அதனால் மக்கள் ராணுவ சேவை சட்டத்தின் கீழ் அனைவரும் பெருமையுடன் பணியாற்ற வேண்டும் என்று கூற விரும்புகிறேன்" என்றார்.

2021-ம் ஆண்டு அதிகாரத்தைக் கைப்பற்றியதில் இருந்து மியான்மர் ராணுவத்தில் இருந்து 14 ஆயிரம் வீரர்கள் வெளியேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply