• Welcome to TamilsGuide
செய்திகள் 1

என்னப்பா பொங்கல் வெச்சாச்சா... பால் பொங்குச்சா இல்லை பானை பொங்குச்சா

கிராமத்தில பொங்கல் அன்று காலை வெளிய வந்தா “என்னப்பா பொங்கல் வெச்சாச்சா... பால் பொங்குச்சா இல்லை பானை பொங்குச்சான்னு” காமெடீன்னு நெனச்சி சில பல கடிகளுடன் பொங்கல் பரவசம் ஆரம்பிக்கும். தொலைக்காட்சி முன்னாடி உட்கார்ந்தா அன்றைய பொங்கலுக்கு வரும் சிறப்பு படங்களில் இசைஞானியின் பாடல்கள் தான் முக்கியத்துவம் பெறும்... அப்புறம் பட்டிமன்றம், பாட்டிமன்றம், முனியம்மா பொன்னம்மாக்களின் பொங்கல்னு அப்படியே நேரம் ஓடும்... மாலை நேரம் கிராமத்துக்கே உரிய வாசனையுடன் தமிழர் கலாச்சாரத்தின் கதவுகள் ஒவ்வொன்றாக திறந்து குதூகளிக்கப்படும். அதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது இசைஞானியின் இசையில் வந்த படங்களும், காலம் கடந்து நிற்கும் அவர் இசையில் வந்த பொங்கல் பற்றிய பாடல்களும்... 

பொங்கல் சம்பந்தமாக நடக்கும் விழா போட்டிகளில் தவறாமல் இசைஞானியின் இசையில் வந்த பாடல்கள் முக்கிய உயிரோட்டமான கதாபாத்திரமாக திகழ்வது அந்த விழா போட்டிகளுக்கு கிடைத்த பெருமை என்றால் அது மிகையாகாது. மேலும் அவர் இசையில் பொங்கல் சம்பந்தமான காட்சி அமைப்புகள் இல்லாத படங்களில் வரும் பொங்கல் பற்றிய பாடல் வரிகளே அதிகம்.. உதாரணமாக போகிப்பண்டிகை துவக்கமாக "மார்கழிதான் ஓடிப்போச்சு போகியாச்சு" பாடலுடன் ஆரம்பித்து “காட்டுகுயிலு மனசுக்குள்ள” பாடலில் வரும் “தை பொறக்கும் நாளை விடியும் நல்ல வேளை பொங்கப்பானை வெள்ளம் போல பாயலாம்.. அச்சு வெல்லம் பச்சிரிசி வெட்டி வெச்ச செங்கரும்பு அத்தனையும் தித்திக்கிற நாள் தான்”.. அதுபோல வருஷம் 16 படத்தில் காதல் பாடலில் தொகையறாவாக வரும் “பொங்கலு பொங்கலு வைக்க மஞ்சள மஞ்சள எடு தங்கச்சி! தங்கச்சி! தங்கச்சி! தங்கச்சி! புஞ்சையும் நஞ்சையும் இந்த பூமியும் சாமியும் இனி நம் கட்சி! நம் கட்சி! நம் கட்சி!” வரிகள் மிகவும் பிரசித்தி பெற்றது.  கட்டளை படத்தில் வரும் “ஆஹா தை பிறந்தது ஏர் பிடித்தவன் கை உயர்ந்தது பொங்கலு பொங்குதடி” பாடல் போகி பொங்கல் உழவர் திரு நாளுக்காகவே உருவாக்கப்பட்ட சிறப்பு பெற்றது. 

1991ஆம் ஆண்டு தீபாவளிக்கு சூப்பர் ஹிட் அடித்த படங்கள் போல அதே வருடத்தில் பொங்கலுக்கு இசைஞானியின் இசையில் வந்த தர்மதுரை, கும்பக்கரை தங்கய்யா, ஈரமான ரோஜாவே ஆகிய படங்களின் பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்து இன்று வரை பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி பரவசப்படுத்தி வருகிறது என்பதும் குறிப்பிடதக்கது. 1992ல் பொங்கலுக்கு வெளிவந்த 7 படங்களில் மன்னன், பாண்டித்துரை, ரிக்‌ஷாமாமா, வண்ண வண்ண பூக்கள், சின்னகவுண்டர் என 5 படங்களுக்கு தலைமுறை தாண்டிய சூப்பர் டூப்பர் ஹிட் இசை பாடல்களை கொடுத்தவர் இசைஞானி. 

இவை அனைத்தையும் தாண்டி முத்தாய்ப்பாக 2001 பொங்கலுக்கு வெளிவந்த படங்களில் ஃபிரண்ட்ஸ் படத்திற்கு இசைஞானியும், வாஞ்சிநாதன் படத்திற்கு கார்த்திக் ராஜாவும், தீனா படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜாவும் இசை அமைத்தது விஷேஷமான பொங்கலாக அமைந்தது.. வேறு எந்த பண்டிகையிலும் 2001ஆம் வருட பொங்கல் போல இசைஞானி மற்றும் அவரின் இரு மகன்களும் தனித்தனியே இசை அமைத்து படங்கள் வெளிவரவில்லை என்பது குறிப்பிடதக்கது. மேலும் 2016ஆம் வருடம் பொங்கலுக்கு வந்த தாரை தப்பட்டை படம் இசைஞானியின் 1000ஆவது படம் என்பது பிரமிக்கத்தக்க ஒரு பெருமையாகி போனது. 

பொங்கல் என்றவுடன் நினைவில் வருவது இசைஞானியின் இசையில் வந்த தைப்பொங்கல் மற்றும் 1994ல் பொங்கலுக்கு வெளியான மகாநதி படங்கள்.. 1980ல் (தேதி மாதம் தெரியவில்லை) வெளிவந்த “தைபொங்கல்” மற்றும் மகாநதி படங்கள் பொங்கல் பண்டிகைக்கு முற்றிலும் சம்பந்தமில்லாத ஒரு பெண் மற்றும் ஒரு ஆணின் வாழ்வில் நடக்கும் வேதனைகளை அடிப்படையாக கொண்ட படங்கள்.. ஒற்றுமை என்னவெனில் ஒன்றில் படத்தின் பெயரும் மற்றொன்றில் அந்த படத்தில் வரும் “பொங்கலோ பொங்கல்…. பொங்கலோ பொங்கல்…. தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டு சொல்லடியோ தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டு சொல்லடியோ” பாடல் வரிகள் மட்டும் தான்.. 

களை கட்டி முடிந்த பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டு பொங்கலுக்காக ஜல்லிக்கட்டு நிகழ்வை நினைவூட்டுவதாக இரண்டு படங்கள் அமையப்பெறும்... ஒன்று ஜல்லிக்கட்டு படம். இரண்டாவது முரட்டுகாளை... இதிலும் முதலாவது படமான ஜல்லிக்கட்டு படமானது முற்றிலும் ஜல்லிக்கட்டு நிகழ்வுக்கு சம்பந்தமில்லாததாகவும் முரட்டுகாளை படமானது அதில் வரும் “பொதுவாக என் மனசு தங்கம்” பாடலில் குழவை தொகையறாவான “பொங்கலு வைப்போம் வாருங்கடி பொங்கலு வைப்போம் வாருங்கடி பொங்கலு வைப்போம் வாருங்கடி” என்பதை ஜல்லிக்கட்டு திருவிழாவுடன் நினைவூட்டுபவையாக இருக்கும்... 

1980 டிசம்பரில் சூப்பர் ஸ்டாருக்கு ஜல்லிகட்டு காளையை அடக்குவது போல எப்படி முரட்டு காளை படம் அமைந்ததோ அது போல 2004ஆம் வருடம் பொங்கல் ரிலீசாக கலைஞானி கமல்ஹாசனுக்கு ஜல்லிகட்டில் காளைய அடக்குவது போல காட்சி அமைப்புடன் அமைய பெற்ற படம் “விருமாண்டி”. பின்னணியில் “விரு விரு மாண்டி விருமாண்டி” என கோரஸ் குரலுடன் அடிபொலி பின்னணியுடன் அந்த காட்சி அதகள படுத்த பட்டிருக்கும்...  மேலும் இந்த படத்தில் உழவனின் தோழன்களான அந்த மாடுகளை மேலும் சிறப்பிக்கும் விதமாக “கொம்புலே பூவை சுத்தி” என்ற ஒரு பாடலே படத்தில் அமைய பெற்றிருக்கும்.  

புத்தாண்டு தொடங்கி அடுத்து வரும் தமிழரின் பாரம்பரிய பண்பாட்டு சின்னமான போகி, பொங்கல், மாட்டுபொங்கல் மற்றும் ஜல்லிக்கட்டு திருவிழாக்களுக்கும் இசைஞானியின் இசையில் வந்த படம் மற்றும் பாடல்களே நம்முடன் அணிவகுத்து சிறப்பிக்கின்றன என்பதே சாலச்சிறந்த உண்மை... 

அனைவருக்கும் இனிய போகி பொங்கல் உழவர் திருநாள் நல்வாழ்த்துகள்...

Kannan Natarajan

Leave a Reply