• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கென்யாவில் கனமழை - வெள்ளப்பெருக்கில் பலியானோர் எண்ணிக்கை 170-ஐ தாண்டியது

கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தலைநகர் நைரோபி உள்ளிட்ட பல நகரங்கள் அங்கு வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

மேலும் பல இடங்களில் மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் முறிந்து விழுந்தன. எனவே லட்சக்கணக்கான மக்கள் அங்கு இருளில் மூழ்கி தவிக்கின்றனர்.

இதற்கிடையே வெள்ளப்பெருக்கு காரணமாக தலைநகர் நைரோபியில் உள்ள மிகப்பழமையான அணையான கிஜாப் சேதமடைந்தது. இதனால் அந்த அணையின் தடுப்புச்சுவர் இடிந்து அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இந்த வெள்ளப்பெருக்கால் அங்கு பல வீடுகள் சேதமடைந்தன. மேலும் பொதுமக்கள் பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இதனையடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணி நடைபெற்றது.

எனினும் கட்டிட இடிபாடுகள் மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி அங்கு இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 170-ஐ தாண்டியது. மேலும் பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இந்த வெள்ளப்பெருக்கால் அங்கு சுமார் 1½ லட்சம் பேர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். எனவே வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு உள்ளனர். எனினும் இந்த கனமழையால் அங்கு இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply