• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சுஜாதாவுக்கு கவிதை எழுதத் தெரியுமா?

சினிமா

வலையுலகிற்கு வாரித் தந்த வள்ளல் சுஜாதா. அவர் எழுதியதை யாராவது ஒருவர் பகிர்ந்து கொண்டே இருக்கிறார்கள். நான் அவரது அனைத்து நூல்களையும் படித்தவன் அல்ல.என்றாலும் படித்ததை அவ்வப்போது பகிர்ந்து வந்திருக்கிறேன்.
அவர் கவிதையில் ஆர்வம் உடையவர் என்பது தெரிந்ததே!அவருடைய எழுத்துலக வாழ்க்கையின் பிற்பகுதியில் திருக்குறள் சங்க இலக்கியங்கள்,ஆழ்வார் பாசுரங்கள் போன்றவற்றை அலசி ஆராய்ந்திருக்கிறார் என்பதும் சுஜாதா ரசிகர்கள் அறிந்ததுதான் .
ஔவையார் (ஆத்திச் சூடி பாடிய ஒளவையார் வேறு ஒருவராம் - இது போல நிறைய நிரூபிக்கப்படாத / நிரூபிக்க முடியாக செய்திகள் வலைத்தளங்களில் உலவுகின்றன)) பாடிய புறநானூற்றுப் பாடலையும் அதை சுஜாதா எளிமையான கவிதையாக மாற்றித் தந்திருக்கிறார் என்பதையும் பார்க்கலாம்.
அரசன் அதியமான் நெடுமான் அஞ்சியிடம் பரிசு பெறச் செண்டிருந்தபோது அரசன் காலம் தாழ்த்த காவல் காரனைப் பார்த்து கோபத்துடன் பாடியதாக அமைந்துள்ளது பாட்டு:
கவிஞர்களின் நிலை அன்றைக்கும் அப்படித்தான் போல் இருக்கிறது. கவிஞர்களை அலட்சியப் படுத்துவதில் அரசனும் விதி விலக்கல்ல. புலவருக்காக வெண்சாமரம் வீசியதெல்லாம் மிகைப்படுத்தப்பட்டதாக இருக்குமோ என்ற எண்ணத்தை இந்தக் கவிதை ஏற்படுத்துகிறது.

இதைப் படித்ததும் மஹாகவி பாரதியும் ,கவிஞர் விக்ரமாதித்யனும் ஏனோ என் நினைவுக்கு வந்து போனார்கள்.

இதுபோன்று சங்கப் பாடல்களை எளிமைப் படுத்தி அளிக்கும் பணியை 'வேர்களைத் தேடி' வலைப்பூவில் முனைவர் குணசீலன் அவர்கள் அளித்து வருவது பாராட்டுக்குரியது.
ஒரிஜினல் புறநானூற்றுப் பாடல்
வாயிலோயே!வாயிலோயே!
வல்லியோர் செவிமுதல் வழங்குமொழி விந்தித்தாம்
உள்ளிய பூ முடிக்கும் உரனடை உள்ளத்து
வரிசைக்கு வருத்தும் இப்பரிசில் வாழ்க்கை
பரிசிலர்க்கு அடையா வாயிலாயே
கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி
தன் அறியலன் கொள்?என்னறியலன் கொள்?
அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென
வறந்தலை உலகமும் அன்றே அதனால்
காலினெம் கலனே சுருக்கினெம் கலப்பை
மரங் கொல் தச்சன் கைவல் சிறார் அர்
மழுவுடைக் காட்டகத்து அற்றே
எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே!
================

இதை சுஜாதா எளிமைப்படுத்தி அளித்தது இதோ
காவல்காரனே!காவல்காரனே
பரிசு கேட்டு வந்திருப்பதை
வள்ளல்கள் காதில் சொல்லிவிரும்பியதை அடைய முடியாத
வாசலின் காவல் காரனே!
நெடுமான் அஞ்சிக்கு தன்னைத் தெரியாதா?
இல்லை என்னைத் தெரியாதா?
அறிவும் புகழும் உள்ளவர்களை
இந்த உலகம் சாகவிடாது
அதனால் வாத்தியங்களையும் பெட்டிகளையும்
எடுத்துக்கொண்டு புறப்படுகிறோம்
தொழில் தெரிந்த தச்சனின் பிள்ளை
காட்டுக்குள் சென்றால் மரமா கிடைக்காது?
எந்த திசையில் சென்றாலும்
எமக்குச் சோறு கிடைக்கும்.?

 டி.என்.முரளிதரன் 
 

Leave a Reply