• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நடிப்பில் இமயத்தைத் தொட்டு அதையும் கடந்து நின்ற , நடிகர் திலகத்தின் புதல்வர்

சினிமா

நடிப்பில் இமயத்தைத் தொட்டு அதையும் கடந்து நின்ற , நடிகர் திலகத்தின் புதல்வர் என்ற மகத்தான தகுதியோடு, அடையாளத்தோடு திரை உலகில் காலடி எடுத்து வைத்தவர், இளைய திலகம் பிரபு அவர்கள்.
அதனால், இவர் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருந்தது உண்மையே.
முதல் படமான , " சங்கிலி"யில் , சிவாஜி அவர்களுக்கு வில்லனாக வேடம் செய்தார்.
பின் தொடர்ந்து பல படங்கள், சிறந்த இயக்குனர்களின் படைப்புகளிலும் ,பெரிய பட நிறுவனங்களின் தயாரிப்பிலும், புதிய திறமையான கலைஞர்களின் படங்களிலும் நடித்து குறுகிய காலத்திலேயே புகழ் பெற்றார்.
மறைந்த முதலமைச்சர் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள், இவரை அழைத்துப் பாராட்டி , நல்ல அறிவுரைகள் வழங்கியிருக்கிறார்.
ஆரம்ப கால படங்களில் , கொஞ்சம் தடிமனான உடல் வாகு இருந்தாலும், நடனக் காட்சிகள், சண்டைக் காட்சிகள் , குதிரை சவாரி, யாவற்றிலும் இவர் காட்டிய வேகம், சுறுசுறுப்பு , அனைவரின் பாராட்டைப் பெற்றது. அதே சமயம் , தான் நடிப்பு சக்கரவர்த்தியின் வாரிசு என்பதையும் , அழுத்தந்திருத்தமாக வசனம் பேசி , உணர்ச்சிகளைக் கொட்டி, நிரூபித்தார்.
தந்தையைப் போலவே, திரை உலகில் அனைத்து கலைஞர்களுடன் , நல்ல நட்பான, ஆரோக்கியமான உறவு கொண்டிருந்தார்.
இதனால் ரஜினிகாந்த் , கமலஹாசன் , சத்யராஜ், போன்றோர் நெருங்கிய நண்பர்களாக ஆனார்கள். பல படங்கள் அவர்களுடன் இணைந்து நடித்தார். பெரும்பாலும் அவை வெற்றிப் படங்களே
மூத்த கலைஞர்கள் ஜெமினி, நாகேஷ், சிவகுமார் போன்றோருடன் நடித்து நல்ல அனுபவமும், பெயரும் பெற்றார். நல்ல பண்போடு, மரியாதையோடு பழகுவார் என்று சொல்லப் பட்டது.

நடிப்புச் சக்கரவர்த்தியின் புதல்வர் என்ற யாருக்கும் கிடைக்காத அரிய தகுதி, அதிர்ஷ்டம் இருந்தாலும், அதனால் கர்வம் கொள்ளாமல், திறமையை வளர்த்துக் கொண்டு, தந்தையின் பெயருக்கும், புகழுக்கும் இழுக்கு வராமல், மேலும் பெருமை சேர்த்தது, இவர் சாதனை.
நடிகர் ரஜினிகாந்த் தொழில் முறை சக கலைஞர், நண்பர் மட்டுமல்லாமல், இவர் குடும்பத்துக்கும் நெருக்கமானவர்.
ஒரு முறை அவர் குறிப்பிட்டிருந்தார்.
" எனக்கு பிரபுவைப் பார்த்தால் மிகவும் பொறாமையாக இருக்கிறது. சிவாஜி சாரின் மகன் என்றால் சும்மாவா. நான் மட்டும் பிரபுவாக இருந்திருந்தால் , ஆர்ப்பாட்டமும், அலட்டலுமாக , தூள் கிளப்பியிருப்பேன். படப்பிடிப்புக்கு, பெரிய மகாராஜா தேரில் வருவது போல் வந்து அதகளம் பண்ணியிருப்பேன்" என்று.
பிரபு அவர்களும் சிவாஜி அவர்களும் சேர்ந்து பல படங்களில் நடித்தனர். பின்பு அவ்வாறு நடிப்பது வெகுவாகக் குறைந்தது.
ஒரு கால கட்டத்தில் பிரபு அவர்களின் உடல் வாகு மேலும் பெருத்து, நாயகன் வேடங்கள் வருவது குறைந்தது. இதற்காக சோர்ந்து விடாமல் , உடனே குணசித்திர பாத்திரங்களை ஏற்கத் தொடங்கி , இன்று இவர் இல்லாத படங்களே இல்லை என்று சொல்லுமளவுக்கு, திரை உலகில் வெற்றிகரமாக நடை போட்டுக் கொண்டிருக்கிறார்.
மூத்த அண்ணன் , அப்பா, மாமா, எதிர்வினையாற்றும் தாதா, காவல்துறை மூத்த அதிகாரி , பெரும் தொழிலதிபர் என்று எக்கச்சக்கமான வேடங்கள்.
வேற்று மொழிப் படங்களில் , மொழி மாற்றுப் படங்கள் மட்டுமல்லாமல் , நேரடி தெலுங்கு , கன்னடப் படங்களில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார்.
தேடினேன் வந்தது- மக்களை அழ வைப்பது
எளிது ஆனால் சிரிக்க வைப்பது கடினம். பிரபு இந்த படத்தில் கவுண்டமணியுடன் சேர்ந்து மிக இயல்பாக அதை செய்திருப்பார். கிரேசி மோகனின் வசனங்கள் பெரும் பலம் என்றாலும், பிரபுவின் நடிப்பு அதை மேலும் ரசிக்க வைக்கும். லாஜிக் ஏதும் பார்க்காமல் ஜாலியாக சிரிக்க வேண்டுமானால் இந்த படத்தை பார்க்கலாம்.
ஒரு கொசுறு தகவல், பிரபு "Ele, My Friend" என்ற ஒரு ஆங்கிலத் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.‌

பிரசாந்த்
 

Leave a Reply