• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இந்த இசையும், வரிகளும் என்னை ஏதோ .....

சினிமா

தமிழ்த்திரைப்படங்களில் வரும் சில பாடல்கள் நம்மையும் அறியாமல் அதன் ஓட்டத்திற்கு ஏற்ப நம் மனதைக் கொண்டு சென்று விடும். காரணம் அந்த இசையும், பாடல் வரிகளும் தான். அப்படிப்பட்ட பாடல்களைப்பாடும் போது தன்னையும் அறியாமல் உணர்ச்சிகரமாகப் பாடும் பாடகிகளும் அழுதே விடுவார்கள். அப்படிப்பட்ட ஒரு பாடலைப் பற்றி இப்போது பார்ப்போம்.

அச்சாணி என்ற படத்திற்காக, இளையராஜா இசையில் பாடகி ஜானகி பாடிய பாடல் இது. வாலி எழுதினார். அச்சாணி படம் 1978ல் வெளியானது. காரைக்குடி நாராயணன் கதை எழுதியுள்ளார். முத்துராமன், லட்சுமி உள்பட பலர் நடித்துள்ளனர்.

வாலி இந்தப் படத்திற்காக மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன்… என்று ஒரு பாடலை எழுதினார். அனைத்துத் தரப்பு வயதினரையும் கவர்ந்து இழுக்கும் பாடல் இது. இந்தப் பாடலைப் பாடும் போது எஸ்.ஜானகி மெய்மறந்து அழுதே விட்டாராம்.

இயேசுவைப் பெறாமல் பெற்ற தாய் என்றால் அவர் மேரி மாதா தான். அவரைப் போலவே இந்தப் படத்தின் கதாநாயகிக்கும் காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்தப் பாடலை ஒலிப்பதிவு செய்வதற்கு பல தடங்கல்கள் வந்ததாம். பிரசாத் ஸ்டூடியோ பிசியாகவே இருந்ததாம். அதனால் இளையராஜா வேறு ஒரு ஸ்டூடியோவுக்குச் சென்றாராம். அங்கு சில கருவிகள் வேலையே செய்யவில்லையாம். அதன் பிறகு மீண்டும் பிரசாத் ஸ்டூடியோவுக்கே வந்து இந்தப் பாடலை ஒலிப்பதிவு செய்தார்களாம். ஸ்டூடியோவில் எப்போதும் மியூசிக் கண்டக்டர் என்று ஒருவர் இருப்பார். அவர் கை அசைத்துக் கொண்டே இருப்பார்.

அதற்கு ஏற்ப இசைக்கலைஞர்கள் இசையை வாசிக்கத் துவங்குவார்கள். ஆனால் இந்தப் பாடலின் இசைக்கு மயங்கி அவர் கை காட்டவே இல்லை. இசைக்கலைஞர்களும் வாசிக்கவே இல்லை. இளையராஜா என்ன ஆச்சு என்று கேட்டார். டியூனில் என்னை மறந்து விட்டேன் என்றாராம். அதன்பின் பாடலை ஜானகி பாடுகையில், பிள்ளை பெறாத பெண்மை தாயானது… அன்னை இல்லாத மகனைத் தாலாட்டுது என்று அந்தப் பாடலில் வரும் வரிகளைப் பாடும்போது பாட முடியாமல் அழுது கொண்டே நிறுத்தி விட்டாராம்.

என்ன ஆச்சு என்று இளையராஜா கேட்க, இந்த இசையும், வரிகளும் என்னை ஏதோ செய்கிறது என்றாராம் ஜானகி. பின்னர் சிறிது ஓய்வு எடுத்த ஜானகி மீண்டும் பாடி முடித்தாராம். இந்தப் பாடலைப் போல எனக்கும் ஒரு பாடல் வேண்டும் என்று இயக்குனர் ஆர்.சுந்தரராஜன் தனது பயணங்கள் முடிவதில்லை படத்திற்காக இளையராஜாவிடம் கேட்டாராம். அப்படி உருவான பாடல் தான் மணியோசை கேட்டு எழுந்து. இந்தப் பாடலையும் ஜானகி தான் பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sridhar Padmanaban

Leave a Reply